சனிப்பெயர்ச்சி விழா தயாராகும் திருநள்ளாறு....


திருநள்ளாறு கோயில் முக்கிய சுவாமி சன்னிதிகளில் 15 லட்ச ரூபாய் செலவில் பித்தளைத் தகடு பதிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சனிப்பெயர்ச்சி விழாவுக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், பைரவர் உள்ளிட்ட சன்னிதிகளில் பித்தளைத் தகடு பதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டி கடந்த மே மாதம் முதல் சன்னிதிகளில் தகடு பதிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. ஸ்ரீ ஆதி கணபதி, ஸ்ரீ சொர்ண கணபதி ஆகியவை ஒரே சன்னிதியில் இக்கோயிலில் உள்ளன. இது ஸ்ரீ சொர்ணகணபதி சன்னிதி என்ற பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. உத்ஸவம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது சொர்ணகணபதிக்கு தங்கக் கவசமும், ஆதி கணபதிக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்படும். சன்னிதிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் ஆன்மிக வேலைப்பாடுகளுடன் பித்தளைத் தகடுகள் முதல்கட்டமாக விநாயகர் சன்னிதியில் பதிக்கப்பட்டது. அடுத்ததாக ஸ்ரீ சுப்ரமணியர் சன்னிதிக்கு பதிக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது. தற்போது தர்பாரண்யேசுவரர் சன்னிதிக்கு செல்லும் முகப்புப் பகுதியில் உள்ள 5 கருங்கல் தூண்கள், முகப்புப் பகுதி மற்றும் படிகளுக்கு தகடு பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஸ்ரீ பைரவர் சன்னிதிக்கு தகடு தயாரிப்புப் பணி நடந்துவருகிறது. ஒட்டுமொத்தப் பணிகளும் ரூ.15 லட்சத்தில் நன்கொடை மூலம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதற்குள் முடிக்கப்பட்டுவிடும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



Leave a Comment