கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில்


நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது கொல்லிமலை. இயற்கை எழில் கொஞ்சும் மலையான இங்கு ஆச்சரியங்களும், அமானுஷ்யங்களும் கலந்த இம்மலையில் 18 சித்தர்களும் சூட்சுமமாக வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள அறப்பளீஸ்வரரை வணங்கினால் அனைத்தும் சிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு கீழே 1200 படிகளை கடந்து கீழிறங்கி சென்று இங்குள்ள புனித அருவியான ஆகாய கங்கை அருவியில் நீராடவேண்டும். வானில் இருந்து கொட்டுவதுபோல இருக்கும் ஆகாயகங்கை அருவியை பார்த்துக்கொண்டே இருப்பது கொள்ளை அழகு அவ்வளவு பிரமாண்டமான அருவி அது. இந்த ஆகாயகங்கையில் நீராடிவிட்டு 1200 படிகள் கடந்து மீண்டும் மேலேறி சென்று இங்குள்ள அறப்பளீஸ்வரரை வணங்கவேண்டும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திப்பது சிறப்பு. குடும்பப் பிரச்சனையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனஸ்தாபம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் ஒற்றுமையாக இருப்பர் என்பது நம்பிக்கை.

உயிர்களின் வாழ்க்கை ஒளிபெற இறை வழிபாட்டில் இருந்த சித்தர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக, இருந்ததுதான் கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, "அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்து விட்டது.

விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பட்டது. இந்த கோவில் சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும் பெற்றது.



Leave a Comment