கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,.....


எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள். ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம் தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே "சுளீர்' என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை.

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'. ஓர் கண்ணோட்டம்.....

ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்......

தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது. கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.

அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது. கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது. ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது' என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.

அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது. ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார். அவள் "திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்' என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள். அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது.

அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின் நினைவு வந்து, உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள். கவுசிகனுக்கோ கோபமான கோபம். கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார்.

அவளோ அலட்சியமாகச் சிரித்தபடி "என்ன.. சாமியாரே! என்னை என்ன கொக்கு என்று நினைத்துவிட்டீரா? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு?' என்று கேலி பேசினாள். கவுசிகன் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார். அவள் மேலும் சொன்னாள்.

"நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான். அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், கடமைகளை முடித்தபின் தான், வேறு எதிலும் நான் ஈடுபட முடியும். நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், குடும்பப் பெண் குடும்பக் கடமைகளைவிட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா என்ன?

கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும்' என்றாள். இன்று எத்தனை பெண்கள் இந்த உண்மைகளைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே என் வருத்தம். வீட்டில் குழந்தைகள், தாய், தகப்பன், மாமன், மாமி, கணவன் யாரையும் கவனிக்காது வீட்டில் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்ரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி பூக்கட்டி, அந்தச் சாமியார் பின்னாலும், இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர் வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன?

கடமைகளைச் செய்வது தான் உண்மையான வழிபாடு என்றும் சாமியாரை விடு.. மாமியாரை மதி' என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா இந்த மகாபாரதக் கதை! கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம். அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும் ஆச்சரியம்!

காட்டில் தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில். அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக்கற்றும் தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே ஆனல் உமக்கு எது தர்மம் என்று தெரியவில்லை ஆகையால் மிதிலைக்குப்போய் அங்கு தர்மவியாதர் என்ற உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும், என்று அனுப்பி வைத்தாள்.

மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர். இறைச்சி வணிகர். கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர்முன்போய் நின்றதும், முனிவரே.. உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா?'' என்று கேட்டதும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

கொஞ்சம் பொறுங்கள்.. மீதமான இறைச்சி யையும் விற்றுவிட்டு வருகிறேன்'' என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார். பின்னர் வீடு போனதும், தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடைகளையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றிவிட்டு வந்து கவுசிகனிடம் பேசத் தொடங்கினார்.

வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர். இது வழிவழியாக வந்த தொழில். நான் உயிர்களைக் கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர அர்ப்பணமாக விற்கிறேன்.

இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சர்யம் மேற்கொள்கிறேன். மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன். எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான் தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாதும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம் நாள்தோறும் மன்னிப்பு கேட்பேன்,'' என்று தர்மத்தை விளக்கினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ""இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண்கண்ட கடவுள். இவர்கள் தான் என் வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கேற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால் எனக்குச் சகலசித்திகளும் உண்டாகிவிட்டன. ஆனால், நீர் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய்விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகி தடுமாறி துன்புறுகிறார்கள். அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை ஆற்றுங்கள்,'' என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டார்.



Leave a Comment