பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு 


பொதுவாக மார்கழி மாதம் வளர்பிறையில்தான் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த முறை மார்கழி மாதம் போகி பண்டிகையின்போது ஏகாதசி வருவதால், ஸ்ரீரங்கம் கோயிலில் மட்டும் கார்த்திகை மாதமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

108 வைண திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்.  இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா, "பகல்பத்து திருமொழி, ராப்பத்து திருவாய்மொழி" என 21 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் பகல்பத்து திருநாள் கடந்த 4ம் தேதி தொடங்கி 13ம் தேதி நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ரத்தின அங்கியணிந்த நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, சொர்க்க வாசலுக்கு வந்தார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "ரங்கா... ரங்கா... கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணதிர பக்திமுழக்கமிட்டனர். நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்த பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். 

சொர்க்கவாசல் திறப்பின்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் பணியாளர்கள் உட்பட வெகுசிலரே இருந்தனர். 
 



Leave a Comment