ராகு - கேது பரிகாரத் தலங்கள் 


சனி, குரு, பெயர்ச்சிகளை போல ராகு-கேது பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  ராகு-கேது தோஷங்களால் பல்வேறு வகையில் அவதிகள் ஏற்படுவது உண்டு. தோஷத்திற்குரிய பரிகாரத்தலங்களை வழிபட்டால், அதிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. ராகு - கேது பெயர்ச்சி அடைந்து இருக்கும் நிலையில் தோஷம் நீக்கும் கோயில்கள் சிலவற்றை பார்க்கலாம்.... 

வாயுத் தலம் - ஸ்ரீ காளஹஸ்தி

ராகு-கேது பரிகார தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீகாளஹஸ்தி. ஆந்திர மாநிலத்தில் உள்ளது இந்த ஸ்தலம்.  காற்றாக எம்பெருமானே எழுந்தருளியிருக்கும் தலம். இங்கு வழிபட்டால் ராகு-கேது தோஷம் உள்பட சகல தோஷமும் விலகும்..

மகாவிஷ்ணு  வழிபட்ட திருக்களாச்சேரி

நாகை மாவட்டத்தில், தரங்கம்பாடிக்கு அருகே உள்ளது திருக்களாச்சேரி. இந்த கோயிலில், ராகு- கேது தோஷம் உள்ளவர்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட தோஷங்கள் நீங்கும். ராகு கால வேளையில் இங்கு வந்து, நாகலிங்கப் பூ, வில்வம் மற்றும் வன்னி இலை ஆகியவற்றை சமர்ப்பித்து, தல விருட்சமான குரா மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில்

சென்னை மயிலாப்பூரில் உள்ளது ஸ்ரீபத்ரகாளியம்மன் மற்றும்  ஸ்ரீகோலவிழி அம்மன் கோயில். ராகு தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள  ஜவஹர்லால் தெருவில்  அமைந்துள்ளது ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில். ராகுவும் கேதுவும் தங்களின் பாவ விமோசனத்துக்காக, இங்கு ஸ்ரீமாகாளீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். சிவனார் ராகு-கேதுவை தனது கைகளில் ஏந்தியபடி, அம்பிகையுடன்  அருள் வழங்கும் தரிசனம் இக்கோயிலின் சிறப்பம்சம்!
இங்கு வழிபட்டால், அனைத்து தோஷங்களும்  நீங்கும். ராகு- கேது பெயர்ச்சியின்போது, இங்கு பரிகார ஹோமங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன

தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர்

திருநெல்வேலி, தேவர்குளம் அருகே உள்ள மூர்த்தீஸ்வரத்தில், ராகு- கேதுவுடன் அருள் பாலிக்கிறார் ஸ்ரீசக்தி விநாயகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, இங்கு உள்ள விநாயகரை வழிபட, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

திருப்பாம்புரம்

கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில். ராகுவும் கேதுவும் ஒரே உருவமாக இருப்பது இக்கோயிலின் சிறப்பு. ஆதிசேஷன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி, வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. இங்கு வழிபட்டால் ராகு-கேதுவால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நீங்கும்.

திருமுருகன்பூண்டி

திருப்பூர் மாவட்டத்தில் முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் - திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர்

திருநெல்வேலி அருகே அமைந்துள்ளது செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர் ஆலயம். ராகு தோஷம் நீக்கும் பரிகாரத் திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. ஸ்ரீகோதபரமேஸ்வரர் மட்டுமின்றி, இங்கே எழுந்தருளியுள்ள அனைத்து தெய்வங்களும் ராகு தோஷம் நீக்கும் வல்லமையோடு திகழ்கின்றனர்.



Leave a Comment