மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா....


மாங்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உப கோவிலான வெள்ளீஸ்வரர் கோவிலும் இதே பகுதியில் அமைந்துள்ளது. தொண்டை மண்டல நவகிரக ஸ்தலங்களில் சுக்கிரன் பரிகார ஸ்தலமான இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.

தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் பிரகாசத்தை சுற்றிலும் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கருங்கற்கள் தரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் உள்ள அனைத்து விமானங்களும் பரிவார சன்னதிகளும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய வண்ணம் தீட்டப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இன்று கும்பாபிஷேக விழா செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இன்று அதிகாலை நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கலசங்களில் புனித நீரானது எடுத்து வரப்பட்டு கோயில் கோபுரத்தின் மேல் விமானத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா செய்து முடிக்கப்பட்டது. மேலும் வெள்ளீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உப சன்னதிகளில் உள்ள கலசங்களிலும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா செய்து முடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா முடிந்த நிலையில் அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.



Leave a Comment