மாங்காடு (சுக்கிரன் தலம்)!


 

‘‘சுக்கிர தசைய்யா அவருக்கு. அதான் சக்கைப்போடு போடறாரு’’ என்று சொல்வார்கள். ஆம், சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசைவாசியையும் குபேரனாக்கும். ஆய கலைகளுக்கும் அதிபதியே சுக்கிரன்தான். கலைத்துறையில் வெற்றி பெற இவர் பார்வை போதும். அழகையும், வசீகரத்தையும், செல்வ வளத்தையும் அருள்வதில் நிகரற்றவர். அந்த சுக்கிரனுக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலமே மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில். 

திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதும், சக்ரவர்த்தியின் குரு சுக்கிராச்சாரியார், மன்னனைத் தடுத்ததும், முடிவில் மன்னனின் மனதை மாற்ற முடியாததால் தானே வண்டாக உருவெடுத்து தானமளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நீர் வார்க்கும் கெண்டியின் வாயை அடைத்துக் கொண்டதும், வாமனனான திருமால் ஒரு தர்ப்பைப் புல்லால் அந்த வாயைக் குத்த, உள்ளே வண்டுருவில் இருந்த சுக்கிராச்சாரியார் பார்வையிழந்ததும் புராண சம்பவங்கள்.

மூன்றடி மண் கேட்ட திருமால் மூவுலகையும் அளந்தார். இதற்குப் பிறகு  சுக்கிராச்சாரியார் தன் பார்வை மீள, திருமாலை பிரார்த்தித்துக் கொண்டார். பெருமாளும், ‘மாங்காடு தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் தவமிருக்கும் பார்வதி தேவிக்கு தரிசனம் கொடுக்க ஈசன் அங்கு வருவார். அப்போது அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறலாம்,’’ என்று அருளினார். அதன்படியே சுக்கிராச்சாரியார் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுதினமும் பூஜிக்க, பார்வதிதேவியை மணம் புரிய அங்கே தோன்றிய ஈசன், சுக்கிராச்சாரியாருக்கும் அருளி அவர் பார்வையை மீட்டுக் கொடுத்தார். 

அத்தகைய சுக்கிராச்சாரியார் பூஜித்த இத்தலத்தை தரிசிப்பவர்களுக்கு சுக்கிரனின் பூரண அருள் கிட்டும். சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடுள்ளோர், ஏன், பார்வை இழந்தவரும்கூட வெள்ளீஸ்வரரை அகக்கண்களால் தரிசித்து, மீண்டும் வந்து  புறக்கண்களால் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகின்றனர்! ஐந்து வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இத்தலம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு வெகு அருகில் உள்ளது.



Leave a Comment