குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 29-ந்தேதி கொடியேற்றம்.... 


உலக புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 29-ந் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. காலை 7.45 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது.

 
கொடியேற்றம் முடிந்ததும் விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது கையில் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கட்டுவார்கள். அதன் பின் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள்.

திருவிழா தொடங்கியதையொட்டி தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு வழி பாடுகள் நடக்கிறது. தினசரி மாலை 6 மணிக்கு இன்னிசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் இரவு 9 மணிக்கு அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

விழாவின் முக்கிய நாளான அக்டோபர் 8-ந் தேதி  சூரசம்ஹாரம் நடக்கிறது. வேடம் அணிந்த பக்தர்கள் காலையில் இருந்தே கோவிலுக்கு வரத்தொடங்குவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் கூடுவார்கள்.

9-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் தெரு வீதி உலா சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு கோவிலுக்கு வந்ததும் முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க் கப்படும்.

அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களது கைகளில் உள்ள காப்புகளை அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்வார்கள்.
 



Leave a Comment