தீபாவளி பலகாரங்கள்....


தீபாவளி என்றாலே பட்டாசும் பக்ஷணங்கள் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு வகை பலகாரங்களை பார்க்கலாம். தீபாவளிக்கு நமது கையால் ஒரு பலகாரமாவது செய்து சாப்பிட்டால் அதன் திருப்தியே தனிதான்.

அதிரசம்

தேவையான பொருட்கள்....
2 கப் பச்சரிசி, 2 கப் வெல்லம், பொடித்த ஏலக்காயம் ஒரு கால் டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன் நெய், தேவையான அளவு எண்ணெய் பொறிப்பதற்கு.

செய்முறை ....


அரிசியை எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு அரிசியை உலர்த்தி பின்னர் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, நைசாக அரைத்த பின்னர் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் போல தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை வடி கட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க வேண்டும்.
சரி பாகு சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறியலாம். வெரி சிம்பிள். ஒரு சின்னக் கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால் சரியான பதம் என்று அர்த்தம்.
சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில், அரிசி மாவையும், ஏலக்காயையும் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை விடவும்.
அடுத்து கிளைமேக்ஸ். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெயில் போட்டு பொறிக்கவும். அதிரசம் ரெடி.

மொறு மொறு கை முறுக்கு

முறுக்கு வகைகளில், கை முறுக்கின் சுவை அலாதியானது. கைமுறுக்கு செய்ய தேவையான பொருட்கள்


அரிசி மாவு - 3 கப், உளுத்தம் மாவு - கால் கப், டால்டா - ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சீரகம் – 100 கிராம், வெண்ணெய் - அரை கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

முறுக்கு செய்முறை

அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.
ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும்.
முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.
சுவையான கை முறுக்கு ரெடி.


பாசிப்பருப்பு நெய் உருண்டை....


தேவையான பொருட்கள்....

பாசிப் பருப்பு – 2 கப், சர்க்கரை - 2 கப், நெய் 200 கிராம், ஏலக்காய் – 6, முந்திரி உடைத்தது 50 கிராம்

நெய் உருண்டை செய்முறை

பாசிப் பருப்பை வாணலியில் சூடாகும் வரை வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது. வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும்.
அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும்.முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.
வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன் அதை மாவின் மேல் ஊற்றவும். அதை மாவை கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம். பின்னர் டப்பாவில் போட்டு மூடிவைத்து சாப்பிடும் போது எடுத்துக்கொள்ளலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது.



Leave a Comment