எடுத்த காரியம் வெற்றி பெற... நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?


நல்ல நாளைத் தேர்ந்தெடுப்பது போலவே அந்த நாளில் செயலைச் செய்ய வேண்டிய நேரத்தினைத் தேர்ந்தெடுக்கவும் தனித்தனியே விதிமுறைகள் உண்டு. திருமணம், கிரகப் பிரவேசம், திருமாங்கல்யத்திற்கு பொன் உருக்குதல், சாந்தி முகூர்த்தம், சீமந்தம், குழந்தையை தொட்டிலில் விடுதல், அன்ன ப்ராசனம், காது குத்தல், அக்ஷர அப்பியாசம், குழந்தையை பள்ளியில் சேர்த்தல், உபநயனம், வாகனம் வாங்கி இயக்குதல், உழவு செய்தல், எருவிடுதல், விதை விதைத்தல், கதிர் அறுத்தல், தான்யம் களஞ்சியத்தில் வைத்தல், தான்யத்தை செலவிடுதல், ஆடு - மாடு முதலானவை வாங்குதல், பொன் ஆபரணம் அணிதல், புதிய வஸ்திரம் உடுத்துதல், மனைகோலுதல், வாசக்கால் வைத்தல், வியாதியஸ்தர் குளித்தல், வியாதியஸ்தர் மருந்துண்ணல், ப்ரயாணம், நிர்வாகம் இடம் மாற்றுதல், புதுக்கணக்கு தொடங்குதல், புதுதொழில் தொடங்குதல், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், வீடு - மனை வாங்க, விற்க என்று எல்லாவிதமான நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனியே விதிமுறைகள் என்பது உண்டு. 

அதற்குரிய லக்னங்களைக் குறித்து எட்டாம் இடம் சுத்தமாக உள்ளதா, அப்படி எட்டாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதற்குரிய பரிகாரம் போன்றவை அத்தனையும் தெளிவாகக் கண்டறிந்து அதன்படி செய்வது நல்லது.

ஒவ்வொரு நாளும் ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களை பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இவற்றில் குறிப்பாக ராகுகாலம் மற்றும் எமகண்ட நேரத்தினை சுபநிகழ்ச்சிகளில் தவிர்க்கும் வழக்கம் நம் தமிழகத்தில் உண்டு. வடஇந்தியாவில் இவற்றை யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை. 

இருந்தாலும் கால தேச வர்த்தமான அனு ஷ்டானத்தின்படி நமது தமிழக சம்பிரதாயத்தில் இந்த நேரங்களில் சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்க்கும் வழக்கம் உள்ளது. அதே போல குளிகை நேரத்தில் எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் அது மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டிருக்கும் என்று சொல்வார்கள். இந்த கருத்தினை மனதில் கொண்டு செய்கின்ற செயலுக்கு குளிகையின் காலம் உகந்ததுதானா என்பதனை அறிந்து செயல்படுதல் அவசியம்.எந்த ஒரு செயலைச் செய்தாலும் நமது ஜாதகப்படி நேரம் நன்றாக இருந்தாலும் கூட நாம் அந்தச் செயலைத் துவக்குகின்ற நாளும், நேரமும் அந்த செயலுக்கு உரிய விதிமுறையின்படி அமைந்திருந்தால் நாம் செய்கின்ற பணியானது எந்தவிதமான தடையுமின்றி வெற்றிகரமாக நடந்தேறும் என்பதில் அணுஅளவும் ஐயமில்லை
 



Leave a Comment