விறன் மிண்ட நாயனார் புராணம் (பாகம் -1)


- "மாரி மைந்தன்" சிவராமன்

விறன் மிண்ட நாயனார் புராணம் (பாகம் -1)
 
அடியார்க்கினியன் சிவபெருமானும் அடியார்களைப் போற்றிய சுந்தரர் பெருமானும் சிவனே கதி என வாழ்ந்த சிவனடியார்களும் போற்றிய நாயனாரே விறன் மிண்ட நாயனார்.

வேறெந்த நாயனாரும் இவர் பெற்ற 
இறை பெருமை 
பெற்றாரில்லை.

நில வளத்திலும் 
நீர் வளத்திலும் 
மலை வளத்திலும் 
குடி வளத்திலும் 
சிறந்த நாடு 
மலை நாடு.

அதற்கு வேறு 
ஒரு பெயர் உண்டு. 
அது சேரநாடு. 
இன்னும் ஓர் இனிய பெயரும் உண்டு. இயற்கை சூழ் 'இறைவனின் தேசமான' கேரள நாடு.

அந்த நாடு 
உருவான கதை
சுவாரசியச் செழுமையும் புராணச் செறிவும் கொண்டது.

ஜமதக்கினி முனிவரின் அருந்தவப் புதல்வன் பரசுராமன்.

அவனும் 
ஒரு தவமுனிவன்.
ஆதி அந்தமில்லாத அரனாரிடம் 
ஒரு மழுவாயுதத்தை வேண்டிப் பெற்றவன்.

மழு என்பது 
அரிய விஷம் 
தடவப்பட்ட 
கோடாரி போன்ற
போர் ஆயுதம்.

சூரனைச் 
சம்ஹாரம் செய்ய வீரவேலுடன் சென்ற வேலாயுதன் முருகப்பெருமான்
அன்னை சக்தி தேவியிடம் கேட்டுப் பெற்ற ஆயுதம் மழுவாயுதமே.

இன்றும் 
கோயில்களில் சிவபெருமான் சண்டிகேஸ்வரர்
பைரவர் 
திருக்கரங்களில் மழுவாயுதம் இருப்பதை பக்தர்கள் தரிசிக்கலாம்.

ஓர் அரிய சிலை கண்டெடுக்கப்பட்டால் கையில் மழு ஆயுதம் இருப்பதைக் கொண்டே அச்சிலை சிவபெருமானின் சிலை எனக் கணிப்பது 
ஆராய்ச்சியாளர் வழக்கம்.

ஜமத்கினி முனிவரை கார்த்தவீர்யன் என்ற சத்திரிய மன்னன் கொன்றுவிட 
சத்திரிய குலத்தையே அழிக்க உறுதி பூண்ட பரசுராமன் 
பரமேஸ்வரனைத் தொழுது 
பரசு என்னும் 
மழுவாயுதத்தைப்  பெற்றான்.

பின்னர் சத்திரிய குலத்தை 
அடியோடு அழித்தான்.

அதனால் ஏற்பட்ட 
பழி பாவம் நீங்க கடுந்தவம் புரிந்து 
தான் சார்ந்த 
மறையவர்களுக்காக 
தனி நாடு 
வேண்டி நின்றான்.

சிவபெருமானின் அறிவுரைப்படி
வருண பகவானை வேண்டி 
தென் கடலில் தன் மழுவை எறிந்தான்.

அது விழுந்த இடமே 
மலை நாடு.
சேர நாடு.
இன்றைய
மலையாள தேசம்.

அந்த சேர நாட்டில் செங்குன்றூர் 
எனும் ஓர் அருள் 
நிறைந்த ஊர்.

ஒரு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் 
வேளாளர் குலத்தில் 
ஒரு மகான் அவதரித்தார்.

அவர் திருநாமமே 
விறன் மிண்ட நாயனார்.

சிவன் மீதும் 
சிவன் அளவிற்கு சிவனடியார்கள் மீதும் உண்மையான திண்மையான 
அன்பும் பக்தியும் மரியாதையும் 
கொண்டவர் 
விறன் மிண்டர்.

சிவனடியாரை வணங்கிவிட்டே
சிவனை வணங்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.

அவரிடம்
யாரேனும் அடியார்கள் பற்றித் தப்பும் தவறுமாக ஏதேனும் சொன்னால் அவர்கள் வாழ்க்கையிலேயே கண்டிராத 
அடியும் உதையும் வலுவாக விழும்.

சிவனடியார்களை வணங்குவது சிவபெருமானை வணங்குவதைக் காட்டிலும் உயர்ந்தது அல்ல எனினும் 
சமம் என்பதே 
அவரது செயல் முழக்கம்.

சிவனடியார்களை வழிபட்டால் தான் 
சிவனை அடைய முடியும். சிவனடியாரை 
இகழ்ந்தால் 
முக்தி பெற முடியாது என்பது அவரது 
கொள்கை முழக்கம்.

சிவபெருமான் மீது கொண்டிருந்த முடிவில்லாத பற்று காரணமாக 
ஏனைய அனைத்து பற்றுகளையும் நீக்கி நிறை ஞானி போல் வாழ்ந்து வந்தார்.

அன்றாடம் சிவபெருமானைத் தரிசிக்க ஆலயங்களுக்குச் செல்லும் போது அங்கிருக்கும் சிவனடியாரை 
வழிபட்ட பிறகே
சிவனைத் தரிசிப்பது 
அவர் வழக்கம்.

கோயில் கோயிலாக சேரநாட்டு சிவாலயங்களைத் தரிசித்து விட்டு 
ஒரு திருநாளன்று சோழநாட்டின் திருவாரூருக்கு 
வந்து சேர்ந்தார் 
நாயனார்.

திருவாரூர் 
தியாகேசுவர பெருமானின்
திருக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக 
பிடித்துப் போகவே திருவாரூரிலேயே தங்கி
தினந்தோறும் கோயிலுக்குப் போக ஆரம்பித்தார்.

அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.

தியாகேஸ்வரரைத் தரிசிக்க அன்றாடம் நிறைய சிவனடியார்கள் வருவது வழக்கம்.

கோயிலினுள் பெருமைமிகு இடமாக விளங்கும் 
தேவாசிரியன் மண்டபத்தில் அவர்கள்
குழுமியிருப்பது
எழுச்சி மிகு காட்சி.

நம் 
விறல் மிண்ட நாயனார் முதலில் சிவனடியார்களை வணங்கிவிட்டு 
பின் 
கோயிலினுள் சென்று 
தியாகராஜப் பெருமானின் திருவடிகளில் சரணடைந்து விடுவார்.

ஒரு நாள்....

தேவாசிரியன் மண்டபத்தில் 
தேவ தேவரின் தொண்டர்களாகிய அடியார்கள் 
குழுமியிருந்து 
'தென்னாடுடைய 
சிவனே போற்றி'
என ஓதிக் 
கொண்டிருந்தனர்.

விறன்மிண்டநாயனாரும் அடியார் கூட்டத்தில் அமர்ந்து 
சிவநாமம் 
உச்சரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது
சிவனை 
பிரதி எடுத்தது போன்று காட்சியளித்த 
ஒரு சிவனடியார் கோயிலுக்கு வந்தார்.

அவர் 'நம்பியூரான்'
சுந்தரமூர்த்தி அடிகள்!

வந்தவர் சிவனடியார்களை 
கண்கள் மலரப் பார்த்தார். அவர்களுக்குத்
தொந்தரவு தர விரும்பாமல் 
அகத்தில் அடியார்களை வணங்கி விட்டு 
புறத்தே கோவிலில் வீற்றிருந்த
பரம்பொருளைத்
தரிசிக்க விரைந்தார்.

இதைக் கண்ணுற்ற
விறன் மிண்டருக்கு வந்ததே கோபம் !
சில நொடிகளில் 
கோபம் 
தலைக்கேறியது.

'அடியார்களை வணங்காது செல்லும் வன்தொண்டன் 
அடியார் கூட்டத்திற்கு புறம்பு...'

என்று கூச்சலிட்டவர், 
கோப மிகுதியால்
தான் நொடிதோறும் தொழும்
இறைவனையும் விட்டுவைக்காது...

'அவரை வலிய வந்து ஆட்கொண்ட சிவபெருமானும் புறம்பு'
என உரத்துக் குரலிட்டார்.

புறம்பு என்றால் 
புறம்பானவர், 
ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர் 
என்று பொருள்.

அவருக்கு என்ன துணிச்சல் பாருங்கள்!

அடியார்கள் எல்லாம் போற்றும் 
சுந்தரமூர்த்தி அடிகளுக்கும் 
பிரம்படி வார்த்தை.

அளவில்லா 
காதல் கொண்ட அம்மையப்பனுக்கும் 
அதே கடும் வார்த்தை.

கோபக் குரல் 
யாருடையது எனக் கவனித்தவாறு 
தன்
தவறை உணர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் இறைவன் முன் நின்று தன் நிலை நினைந்து மன்றாடினார்.

"வேத முதல்வனே...! அடியேன் 
சிவனடியார்க்கெல்லாம் அடியேன் ஆகும் நாள் எந்நாளோ ?"
என அருவியாய்
விழுந்த கண்ணீர் கால்வழி ஓடிய 
நிலையில் கதறினார்.

"பெயருக்கேற்ற
அழகிய பக்தனே... !

நாம் எப்போதும் அடியார்களுடன் உள்ளோம்...
நீ அடியார்களைப் பற்றி அழகு தமிழில் பாட்டிசை.

நீ எதிர்பார்க்கும் நாள் எதிரில் வந்து வாழ்த்திசைக்கும்."

சிவபிரானின் பதில் சுந்தரருக்கு 
அசரீரி போல் 
உள்மன செவிகளில் பாய்ந்தது.

"எது எழுத...?
என்ன எழுத...??
எப்படி எழுத....???
எப்படி ஆரம்பிப்பது...????  இப்படி ஆயிரம் கேள்விகள்.
கேள்வியின் நாயகனிடம் கேட்டார் சுந்தரர்.

புன்னகை பூத்தபடி
'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்'
எனத் தொடங்கு
என்று முதலடி 
எடுத்து தந்தார் 
மூலநாதப் பெருமான்.

அவரின் பாதம் 
பணிந்தார் சுந்தரனார் பிறவிப்பயன் அடைந்த பெருமிதத்தோடு.

திருப்தியோடு 
திரும்பிய 
சுந்தரமூர்த்தி நாயனார் சிவனடியார்கள் குறித்து அருளியதே 'திருத்தொண்டர் தொகை' திருப்பதிகம்.

இதனை மூலமாக வைத்தே பின்னர் சேக்கிழார் 
'பெரிய புராணம்' படைத்தார்.

இப்போது 
இங்கு நாம் 
உணர்வதும் தெளிவதும் பெரியபுராணத்தின் 
சிறிய புராணமே.

(விறன்மிண்ட நாயனார் - தொடரும்)
 



Leave a Comment