தீபாவளி... இது தல தீபாவளி


தீபாவளி ஆண்டுக்கு ஆண்டு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. ஆனால், ‘தலை தீபாவளி’ ஆயுளுக்கே ஒரு முறைதான். பண்டிகைகள் எத்தனையோ உண்டு. ஆனால், இதுவரை தனித்தனியாக கொண்டாடிய தீபாவளியை, வாழ்நாள் முழுக்க உடன் பயணிக்கப்போகும் துணையோடு சேர்ந்து கொண்டாடுவது ‘ஸ்பெஷல்’ தான். பொதுவாக திருமணத்திற்கு பின்பு வரும் பண்டிகைகள் பையன் வீட்டில்தான் கொண்டாடப்படுவது நம் சமூக வழக்கம். ஆனால், தலை தீபாவளி எப்பவுமே பெண் வீட்டில்தான். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளை தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, பெண்ணின் பெற்றோர், மணமகன் வீட்டிற்கு சென்று சீர்வரிசை (பூ, பாக்கு, வெற்றிலை, பழம், புதுதுணி) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைக்கிறார்கள்.

தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து தம்பதிகள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். மாப்பிள்ளைக்கு வைக்கப்படும் எண்ணெய் கிண்ணத்தில், மாமனார் எப்படியோ கடனோ உடனோ வாங்கி செய்த தங்க மோதிரம் இருக்கும். ‘கிண்ணத்தில் கை விட்டுப் பாரு. மோதிரம் இல்லேன்னா குளிக்கவே குளிக்காதே’ என்று மாப்பிள்ளையின் அம்மா வீட்டிலேயே ‘அட்வைஸ்’ செய்து அனுப்பியிருப்பார். அவரவர் வசதிக்கேற்ப மோதிரம் அரை சவரனோ, ஒரு சவரனோ இருக்கும். சில வசதிக்கார மாமனார்கள் ‘போனஸாக’ மைனர் செயினும் போட்டு அசத்துவதுண்டு. மாப்பிள்ளைக்கும் செலவு உண்டு. மச்சினி, மச்சினன் இருந்தால் அவர்களுக்கு டிரெஸ். பட்டாசு என்று பர்ஸுக்கு பங்கம் ஏற்படலாம்.

அடுத்தது என்ன? சாப்பாடுதான். மாப்பிள்ளை வந்திருக்காரேன்னு பல வெரைட்டில பலகாரத்துடன், சுடச் சுட இட்லி, குடல் கறிகுழம்பு என செஞ்சு வச்சிருப்பாங்க. புதுமாப்பிள்ளை என்பதால், கொஞ்சம் தூக்கலாக கவனிப்பார்கள். பின்னர், இருவரும் ஜோடியாக சேர்ந்து பட்டாசுகளை கொளுத்தி, பட்டையைக் கிளப்புவார்கள். இவ்வளவு கவனிப்பும் இன்றைக்கு ஒரு நாள் மட்டும்தானா? என ஏக்கத்துடன் ஊருக்கு திரும்புவார் மாப்பிள்ளை. தல தீபாவளி சம்பிரதாயம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. நகரங்களில் அதிகபட்சம் அறுபது சதவித தம்பதிகள்தான் இப்போது தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.



Leave a Comment