அழியாத புகழ் தரும் அங்காரகன்


நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். மங்களன், அங்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். நெருப்புக்கு அதிபதியான செவ்வாய் ஆதிக்கம் செலுத்துபவராகவும் இருக்கிறார். வீரதீர செயல் புரிதல், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத் திறன், தைரியம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, வளைந்து கொடுக்காத தன்மை, உயர்பதவி, தலைமை பொறுப்பு போன்றவற்றை ஒருவருக்கு தரக்கூடிய வல்லமை பெற்றது செவ்வாய் கிரகம்.  தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு, குரலில் அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர்.

போட்டி, பந்தயங்கள், உடல் திறன், சாகச நிகழ்ச்சிகளில் புகழ் பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. நம் உடலில் ரத்தத்துக்கு காரகமாக இருப்பவர் செவ்வாய். செவ்வாய் பலம் குறைந்தால் உடலில் ரத்த சம்பந்தமான நோய்கள் தோன்றும். இவருக்கு சகோதர காரகன் என்ற பெயரும் உண்டு. சகோதர, சகோதரிகளின் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்மானிக்கிற கிரகமும் இதுதான். செவ்வாய்க்கு பூமிகாரகன் என்ற அமைப்பும் உள்ளது. இவரது தயவு இருந்தால்தான் நிலம், தோட்டம், எஸ்டேட், வீடு, பங்களா போன்ற அசையா சொத்துக்களை பெற முடியும்.

செவ்வாயின் அருள் பார்வை இருந்தால்தான் ரியல் எஸ்டேட், கட்டிட தொழில், சிவில் இன்ஜினியர் போன்ற தொழில்களில் சிறக்கலாம். திருமண விஷயத்தில் செவ்வாயின் பங்கு மிகவும் முக்கியமானது. இவர் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்ற அமைப்பை உண்டாக்குபவர். லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று பெயர். இத்தகைய அமைப்பு உடைய ஜாதகங்களை அதே போன்று செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே சிறந்த பரிகாரம்.
 



Leave a Comment