திருநள்ளாறு கோயில் தங்க ரத பணிகள் தீவிரம்


திருநள்ளாறு கோயிலில் தங்க ரதம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூ. 4.5 கோடி மதிப்பில் தங்க ரதம் தயார் செய்யும் பணியில், தற்போது செப்புத் தகடு பதிக்கும் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், இரண்டரை ஆண்டுக்கொரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற்றமாக சிறப்பு வழிபாடுகளுக்கான வசதிகளாக தங்க காக வாகனத்தில் சனீஸ்வரர் பிராகாரப் புறப்பாடு உள்ளிட்டவை இருந்தாலும், கோயிலுக்கென தங்க ரதம் இருக்க வேண்டும் என நிர்வாகத்தினர் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

கடந்த 2014 -ஆம் ஆண்டு தங்க ரதம் தயார் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டாலும், தொடர் பணிகளின்றி முடங்கியது. கடந்த மார்ச் மாதத்தில் முடங்கியிருந்த பணிகள் மீண்டும் தொடங்கின. ரதத்துக்கான மரப்பணிகள் நிறைவை எட்டியுள்ளன. தங்க ரதம் ஒட்டுமொத்தமாக ரூ. 4.5 கோடி மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. பீடம், சிம்மாசனம், விமானம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த ரதம் 14.5 அடி உயரத்தில், பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளது. தற்போது செப்புத் தகடு பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 460 கிலோ செப்பு பயன்படுத்தப்படுகிறது. செப்புத் தகடு பதிக்கும் பணிகள் ஒரு மாத காலத்துக்குள் முடிந்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக 8 கிலோ எடையில் தங்கத் தகடு பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.



Leave a Comment