திருப்பதி பிரம்மோற்சவத்தில் பங்கேற்க அழைப்பு?


திருப்பதியில் நடைபெற உள்ள ஏழுமலையானின் வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வைதீக நாள் காட்டியின்படி இந்த ஆண்டில் அதிக மாதங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாக, திருப்பதியில் நடப்பாண்டில் இம்மாதம் வருடாந்திர பிரம்மோற்சவமும், அடுத்த மாதம் (அக்டோபர்) நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளன.


பிரம்மோற்சவத்தின் சிறப்பை விளக்கும் வகையில் 12 ஆயிரம் சுவரொட்டிகள், ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் 8 ஆயிரம் கையேடுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

திருமலைக்கு வரும் அனைத்து மாநில மக்களுக்கும் தெளிவாகப் புரியும் வகையில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த சுவரொட்டிகளை தேவஸ்தானம் அச்சடித்துள்ளது

வாகன சேவை விவரங்கள், அவற்றின் நேரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கிய சுவரொட்டிகளை திருமலை, திருப்பதியில் உள்ள விசாரணை மையங்கள், நேர ஒதுக்கீடு டோக்கன்கள் அளிக்கப்படும் கவுன்ட்டர்கள், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ளது.

திருமலை-திருப்பதி இடையே இயக்கப்படும் பஸ்கள், திருமலை மற்றும் திருப்பதியிலிருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், தெலுங்கானா ஆகியவற்றுக்கு இயக்கப்படும் ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழக பஸ்களிலும் சுவரொட்டிகளை ஒட்டி தேவஸ்தானம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதனால் இம்முறை பிரம்மோற்சவத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Comment