ஆரூரா தியாகேசா என பக்தி கோஷத்துடன் ஆடி வந்த ஆழித்தேர்...


உலகில் காணப்படும் தேர்களில் ஆழி என அடைமொழியோடு அழைக்கப்படும் ஒரே தேரான திருவாரூர் ஆழித்தேரில் ஸ்ரீதியாகராஜ சுவாமி அஜபாநடனத்துடன் நேற்று இரவு எழுந்தருளினார்.  அதனை தொடர்ந்து இன்று காலை 8.50 மணிக்கு வடம்பிடிக்கப்பட்டது. அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆருரா தியாகேசா என பக்தி கோஷத்துடன் வடத்தை பற்றி ஆலய பிரதான வீதிகளில் வலம் வந்தனர்.

சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும் கோவில்களின் கோவில் என போற்றப்படுவதும், பூமிக்குரிய ஸ்தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் தொன்மை சிறப்புவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஆலயம்.

இவ்வாலயத்தின் வருடாந்திர திருவிழா பங்குனி பெருவிழாவாக அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு இவ்வாலயத்தின் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு.  அதன்படி பங்குனி ஆயில்ய நட்சத்திர நாளான இன்று ஆழித்தேரோட்டம் ஆலய ஆகமவிதிபடி நடைபெற்றது.    

96 அடி உயரமும், 450 டன் எடையும் கொண்ட பிரமாண்டமாக ஆழித்தேர் விதியினை ஆக்கிரமித்து நிற்க தேரின் முன்பக்கம் பிரமாண்ட வகையில் வடிவமைக்கப்பட்ட 4 குதிரைகள் 4 வேதங்களை மையமாககொண்டு கட்டப்பட்டு தேரையொட்டும் சாரதியாக பிரம்மா அமர்ந்து தேரை ஆலயத்தின் பிரதான 4 ராஜவீதிகளிலும் கொண்டு செல்வதாக ஐதீகத்தின்படி தேரில் காட்சிபடுத்தப்பட்டு தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 450 டன் எடையளவு கொண்ட ஆழித்தேர் வீதிகளில் பக்தர்கள் பக்தி பரவசத்துட்ன இழுத்து செல்ல ஏதுவாக 4 டன் எடையளவு கொண்ட 500 அடி நீளம் கொண்ட 4 பிரமாண்டமான வடங்கள் கட்டப்பட்டுள்ளதோடு,  தேர் சக்கரங்களை உந்த செய்யும் வகையில் 2 புல்டோசர் இயந்திரங்களும் தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புல்டோசர் இயந்திரம் உள்ளிட்டவை தேரோட்டத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் தேர் வீதிகளில் சீராக செல்லும் வகையிலும், தேர் வீதிகளில் செல்லும்போது அதன் வேகத்தை முறைப்படுத்திடவும் தேரின் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டு உள்ளது.  தேரோட்டத்திற்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும், தேர் வீதியின் மையமாக செல்ல ஏதுவாக தேர்கொத்தனார்கள் மரத்திலான முட்டுகட்டைகளை தேர் சக்கரங்களின் அடியில் வைத்து முறைப்படுத்தினர்.

ஆழித்தேரோட்டத்திற்கு முன்னதாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேர் வடம்பிடிக்கப்பட்டது.  ஆழித்தேருக்கு பின்னதாக அம்பாள் ஸ்ரீநீலோத்பலாம்பாள் தேரும், அதனை தொடர்ந்து ஸ்ரீசண்டிகேஸ்வர சுவாமி தேர் வடம்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் 5 தேர்கள் ஆலய வீதிகளில் வலம் வருவதை இலட்சக்கணக்கான பக்தர்கள்  கண்டுகளித்து தேர்களில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கினர்.



Leave a Comment