அழகர் கோயில் பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி சன்னதி கதவுகள் திறப்பு... ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அற்புத நிகழ்வு


மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மதுரை மாவட்டம் அழகர்மலை ஆன்மிக பூமி. அடிவாரத்தில் அழகர்கோயில். மலையின் நடுவே முருகனின் அறுபடை வீடான பழமுதிர்ச்சோலை. உச்சியில் ராக்காயிகோயில் என உள்ளது. இங்கு காவல் தெய்வமாக நிற்பவர் பதினெட்டாம்படி கருப்பசாமி.

திருமாலிருஞ்சோலை, அழகர் மலை, சோலைமலை என்றும் பல பெயர்களால் அழைக்கப்படும் அழகர் கோவிலின் மூலவராய் அருள்பாலிக்கிறார் பரமஸ்வாமி. அங்கே உற்சவராக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அருள் பாலிக்கிறார் கள்ளழகர். இந்த அழகரையும், மலையையும் காவல் காத்து வருகிறார் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி. இவருக்கு உருவம் இல்லை. மூடப்பட்ட கதவு குடம் குடமாய் ஊற்றி பூசப்பட்ட சந்தனம், கதவை அலங்கரிக்கும் அழகிய நிலை மாலை என கம்பீரமாக காட்சி தருகிறார் கருப்பண்ணசாமி. மிகப்பெரிய அரிவாள் உள்ளது.

கள்ளழகர் திருக்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னதி கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு 18 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி  பரம்பரை பூசாரிகள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஈடுபட்டனர்.

அழகர் கோவில்  கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவில் ஒன்பதாம் நாள் திருவிழாவாக இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட திருத்தேரோட்டம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று இரவு கள்ளழகர் கோயில் உள்ள காவல் தெய்வமான 18ம் படி கருப்பண்ணசாமி கோயில் சன்னதி கதவுகளுக்கு பரம்பரை பூசாரிகளால் சந்தனம் சாத்தப்பட்டு கதவுகள் திறக்கப்பட்டன.

பல ஊர்களில் கையில் அரிவாளுடன் காவல் தெய்வமாக காத்திருக்கும் கருப்பசாமி அழகர் கோவிலில் அருவமாக கதவாக இருந்து கோவிலை பாதுகாத்து வருகிறார். அழகர் கோவிலில் தரிசனம் முடிந்த உடன் ஆலயம் மூடியதும் சாவியை அழகர்கோயில் சந்நிதியில் வைத்து வழிபடுவார்கள்.

ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமி நாளில் கருப்பண்ணசாமி கோவில் கதவுகள் திறக்கப்படும். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு  பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. 18 படிகளாக உருமாறி உள்ள இந்த சன்னதியில் 18 சித்தர்களுக்கும் சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து கள்ளழகர் பெருமாள் பதினெட்டாம் படி சன்னதி முன்பு பூப்பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகர் பெருமானை வழிபட்டனர்.



Leave a Comment