தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா


தஞ்சை பெரியகோவிலில் கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், முருகன், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இதில் வராகி அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி பெருவிழா கணபதிஹோமத்துடன் தொடங்கி உள்ளது.

தொடர்ந்து சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. யாகம் முடிந்ததும் வராகி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் காலையில் யாகமும், மாலையில் அம்மனுக்கு அலங்காரமும் நடைபெறுகிறது. இன்று 2-ம் நாள் அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், நாளை (சனிக்கிழமை) 3-வது நாள் குங்கும அலங்காரமும், 4-வது நாள் சந்தன அலங்காரமும், 5-வது நாள் தேங்காய்ப்பூ அலங்காரமும், 6-வது நாள் மாதுளை அலங்காரமும், 7-வது நாள் நவதானிய அலங்காரமும், 8-வது நாள் வெண்ணெய் அலங்காரமும், 9-வது நாள் கனிவகை அலங்காரமும், 10-வது நாள் காய்கறி அலங்காரமும், 11-வது நாள் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. கடைசி நாள் அன்று மாலை அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.



Leave a Comment