அஷ்டமி பைரவரின் சிறப்பு!


 

சிவலாயங்களின் காவலர் பைரவ மூர்த்தி. இவர் நாயை வாகனமாகக் கொண்டவர்.சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது பைரவர் என்ற திருநாமம். ‘பீரு’ என்றால் பயம் என்று பொருள்.பயம் தரக்கூடியவர்,எதிரிகளை அஞ்ச வைப்பவர் பைரவர்.

 இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.

அஷ்டமி சிறப்பு!

நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

 

நவக்கிரக பைரவர்!

பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

அஷ்டமி செவ்வாய்!

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்கியங்கள் கூடிவரும்.

இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள்.அன்றைய தினம்  பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

 

 



Leave a Comment