அதிசய கோவில்: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கும்!


 

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலின்  கொடி மரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன்,சிவபெருமான் அருள்பாலிக்கிறார். ஈசனுடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறான்.இந்த ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப், போல அம்பாளை முன்னிறுத்தும் ஆலயமாகும்.

இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு தடவை 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல்வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டமின்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை பயபக்தியுடன் பஜனைகள் பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகமாகும்.

கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் ஹாசன் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். அத்துடன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட வெளிமாநில பக்தர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தார்கள்.

இந்த ஒன்பது நாட்கள்  மட்டும் திறக்கப்படும் கோவிலுள்ள அம்பாளை வழிபாடு செய்தால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.



Leave a Comment