திருப்பதியில் 29-இல் கருட சேவை


சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருமலையில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறும் கருட சேவையைக் காண அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவர். அதனால் திருமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் கருட சேவையைக் காண வேண்டும் என தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பௌர்ணமி அன்று மாலை வேளையில் கருடசேவையை நடத்தி வருகிறது.
இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ஜனவரி 2-ஆம் தேதி அத்யயனோற்சவம், ஜனவரி 31 சந்திரகிரகணம், மார்ச் 2-ஆம் தேதி தெப்போற்சவம், மார்ச் 31 வசந்தோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களை முன்னிட்டு அன்று மாலை நடைபெற இருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது.
அதனால் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 7 மணிக்கு பௌர்ணமி அன்று 2018-ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி கருடசேவை நடைபெற உள்ளது.
அதேபோல் ஜூலை 27-ஆம் தேதி சந்திரகிரகணம், நவம்பர் 22-ஆம் தேதி கார்த்திகை பௌர்ணமி, டிசம்பர் 22-ஆம் தேதி அத்யயனோற்சவம் உள்ளிட்ட காரணங்களுக்காக கருடசேவை ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும், மே 29, ஜூன் 28, ஆகஸ்ட் 26, செப்டம்பர் 25, அக்டோபர் 24 உள்ளிட்ட தேதிகளில் பௌர்ணமி கருட சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.Leave a Comment