சமயபுரத்தில் தேரோட்டம் கோலாகலம்


சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையானது பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில். கோயிலில் கடந்த மார்ச் 11ம் தேதி பூச்சொரிதல் விழா துவங்கியது. அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் பூச்சொரிதல் விழா தொடர்ந்தது. இந்த விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வண்டிகளில் அம்மனை அலங்கரித்து பூக்கள் எடுத்து வந்து அம்பாளுக்கு சாற்றி வழிபட்டனர்.
பூச்சொரிதல் விழாவையொட்டி 28 நாட்கள் அம்பாள் உலக நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டார். இவ்விழா ஏப்ரல் 8ம் தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த 8ம் தேதி சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலை கொடி மரம் முன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது. விழா நாட்களில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷன், மரக்குதிரை ஆகிய வாகனங்களில் திருவீதி உலா வந்தார். தேரோட்டம் இன்று காலை நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் உற்சவ அம்மன் கருவறையிலிருந்து புறப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தேரில் எழுந்தருளினார்.
காலை 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ‘தாயே...மாரியம்மா’ என்ற கோஷம் விண்ணதிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் தேர் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து பிற்பகலில் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தையொட்டி திருச்சியில் நேற்றும், இன்றும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்திரை தேர்த்திருவிழா 11ம் நாளில் உற்சவ அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், 19ம் தேதி முத்துப்பல்லக்கிலும் காட்சியளிப்பார். 20ம் தேதி உற்சவ அம்மன் தெப்பத்தில் காட்சியளிக்கும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.



Leave a Comment