அஷ்டமி திதியில் அம்பிகைக்கு கல்யாணம்


தன் நாயகன் ஐயாறப்பனுடன் தர்மசம்வர்த்தினியாக தேவி திருவருள்புரியும் தலம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு. சூரிய புஷ்கரணியை தல தீர்த்தமாகக் கொண்ட தலம் இது. இந்தக் குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக்குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும். இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தர்மசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவதுபோல, இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள்கூட சாற்றப்படுவதுண்டு. இங்கே மூலவர் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடாமுடியை மிதிக்கக்கூடாது என்பதால் சந்நதியை வலம்வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நவகிரகங்களில் இது சூரியத்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிராகாரங்களைக் கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி அடைகிறது. சூரியன் இந்தக் கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.Leave a Comment