பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை...


கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி தொடங்கி 12 நாள்கள் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி களப பூஜை 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா ஆக.1ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிவரை நடைபெறும். தொடக்கநாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடைபெறும். திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் தங்கக் குடத்தில் சந்தனம், களபம், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் நிரப்பப்பட்டு பூஜை நடைபெறும். இதை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ பூஜை செய்கிறார்.

களப அபிஷேகத்துக்குப் பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணங்கள், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க அங்கிகவசம் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராத, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, தாமரை, துளசி உள்ளிட்ட பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அம்மன் உள்பிரகாரத்தில் வலம் வருதல், தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியன நடைபெறும்.
ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் பாரதி, கோயில் மேலாளர் சிவராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.



Leave a Comment