ஸ்ரீரங்கம் கோவிலில் சித்திரை தேர் திருவிழா....


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவில் நேற்று நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார். ஏப்ரல் 25 ஆம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 7-ம் திருநாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின்னர் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றார்.

8-ம் திருநாளான இன்று(திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து 8.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபம் வந்து சேருகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்கிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.

பின்னர் 5 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறு கிறது.



Leave a Comment