சோலைமலை முருகனுக்கு சங்காபிஷேகம்....


முருகனின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயிலில் முதல் சோமவார நிகழ்ச்சியில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அழகர்மலையில் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோயில் தமிழ் வருட பிறப்பு, கந்தசஷ்டி, தைப்பூசம், உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கார்த்திகை மாதத்தில் சோமவார நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சஷ்டி மண்டபத்தில் ஷண்முகர் சன்னதியின் முன்பாக பிரத்யேகமாக ராமேஸ்வரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 1008 சங்குகள் ஒம்வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டு தானியங்கள் பரப்பப்பட்டு அதன் மீது அடுக்கப்பட்டிருந்தது.
சுற்றிலும் கலசங்கள் வைக்கப்பட்டு அதில் மாவிலைகளும், வண்ண மலர்களும் இணைக்கப்பட்டிருந்தது.
அதை தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மூலவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது.
இதைபோலவே வருகிற 28ம் தேதியும் அடுத்த மாதம் 5ம் தேதியும் சோமவார நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் 4வது சோமவார நிகழ்ச்சி 12.12.2016 திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது.

இதைதொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான திருக்கார்த்திகையின் போது கோயில் வளாகம் முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும். மேலும் ராஜகோபுரம் முன்பாக சொக்கப்பனையும் கொளுத்தப்படும். அப்போது சுவாமி புறப்பாடும் நடைபெறும்.



Leave a Comment