திருப்பதியில் கோடிக்கணக்கான பக்தர்கள் தலைமுடி காணிக்கை


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 1.25 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துவதாக திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவில் 6 அரங்குகள் உள்ளன. இதில் முதல்கட்டமாக தற்போது ஒரு அரங்கு பக்தர்களுக்கு காற்றோட்டமாகவும் பிற வசதிகள் நிறைந்ததாகவும் புனரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய, கோயில் தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு 1.25 கோடி பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துவதாகவும், இதில், 1.10 கோடி பேர் மொட்டை அடித்தும், மீதமுள்ள பெண் பக்தர்கள் தங்களது தலைமுடியின் கொனை முடியை காணிக்கையாக செலுத்துவதாகவும் கூறினார். அதன்படி, தலைமுடி காணிக்கை செலுத்தும் இடத்தை சுத்தமாகவும், காற்றோட்டமாகவும், தொற்று நோய்கள் பரவாத வகையிலும் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த அவர், அதில் தற்போது முதல் கட்டமாக 6 அரங்கில் ஒரு அரங்கு புனரமைக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல், அனைத்து அரங்குகளும் புனரமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
மேலும், சவர தொழிலாளர்களுக்கு தொற்று நோய்கள் பரவாத வகையில் மருத்துவ சோதனை நடத்தப்படுவதாகவும், 282 சவரத்தொழிலாளர்கள் நிரந்தரமாக பணி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதில், 1200 ஒப்பந்த சவர தொழிலாளர்களுக்கு ஒரு மொட்டைக்கு 7 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருவதாக கூறிய சாம்பசிவ ராவ். தலைமுடி காணிக்கை செலுத்துவதற்காக காலை 8 மணி முதல் 12 மணி வரையில் தான் அதிகளவிலான பக்தர்கள் வருவதாக கூறினார். வருடாந்திர பிரமோற்சவம் மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கூடுதலாக சவர தொழிலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



Leave a Comment