அகத்தியரின் மாணவர் கோரக்கர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

கோரக்கர் சித்தர் திவ்ய சரித்திரம் (பாகம் -5)

சதுரகிரி 

எண்ணிலடங்கா சித்தர்களின் 
வாசஸ்தலம்.

கோரக்கரின் 
தவக்குகை 
சதுரகிரியின்
ஆன்மீக அருமை
சொல்லும்.

சதுரகிரியில்
ஏறக்குறைய 
எல்லா சித்தர்களின் ஆசிரமத்தில் தங்கி இருந்தவர் கோரக்கர்.

அந்த கதை சுவாரசியமானது.

 
இணைபிரியாது 
இருந்து தோழர்
பிரம்ம முனியுடன் 
யாகம் நடத்தி 
இறை மூலிகைகளை உலகுக்கும் 
சித்த மருத்துவத்திற்கும் உருவாக்கி வழங்கிய பின்னர் 
ஒரு காலகட்டத்தில் இருவரும் 
தனி வழி கண்டனர்.

கோரக்கர் 
சதுரகிரி வனத்தில் 
வலம் வந்து கொண்டிருந்தார்.

ஓரிடத்தில் 
இடையன் ஒருவனைப்
 பாம்பு தீண்ட 
அவன் மாண்டிருந்தான்.

கொஞ்ச தூரத்தில் 
அவன் 
காதல் மனைவி
 உணவுடன் 
அவனுக்காக 
காத்து இருந்தாள்.

இரண்டையும் கண்ட கோரக்கர் 
பெண்ணிடம் 
இரக்கம் கொண்டார்.

ஏற்கனவே
 யாககுண்டத்தில் வந்த பெண்களைச் சபித்து 
பாவம் செய்ததற்கு பரிகாரம் செய்ய 
உறுதி பூண்டார்.

மாண்டிருந்த 
இடையனின் 
உடலில் புகுந்தார்.

மாண்ட 
இடையன் மீண்டான். 

அது முன்
தன் உடலை 
குகை ஒன்றில் 
ஒளித்து வைத்தார்.

வேட்டைக்கு வந்த
 மன்னன் ஒருவன்
 உடலைப் பார்த்து 
அனாதைப் பிணம்
என நினைத்து 
எரித்துச் சென்றான்.

இடைச்சியுடன்
அவள் முதுமைக் 
காலம் வரை 
வாழ்ந்த கோரக்கர் 
அவள் மரணமடைய 
ஈமச் சடங்குகள்
 அனைத்தும் 
செய்துவிட்டு 
குகை திரும்பினார்.

உடல் தேடினார். அகப்படவில்லை.

அதன் கதைதான்
 அரசனால் 
முடிக்கப்பட்டு பல்லாண்டுகள் ஆகியிருந்ததே !

அதனால் 
ஜீவித்திருக்கும் 
இடையன் உடலையே 
தன் ஆற்றலால் 
கற்ப மூலிகைகள் 
உண்டு
கற்ப உடல் ஆக்கிக்கொண்டார்.

அதற்காக 
அவ்வுடலிலேயே 
சதுரகிரி மலையில் நாகார்ச்சுனர் 
சாணாக்கிய முனிவர் போன்றோரோடு
ஆசிரம் ஆசிரமமாய் தங்கலானார்.

இது 'கருவூரார் வாதகாவியத்தில்"
இடம்பெற்றுள்ள 
நிகழ்வு.


பொருள் விளங்காத பாடல்களை 
எளிமையாக 
எழுதினார் கோரக்கர்.

வழக்கம்போல் சித்தர்களிடையே கோபம்
 விளைந்தது.

இடைக்காடர் 
அகப்பையார்
நந்திதேவர் 
மச்சமுனி 
சட்டநாதர் 
பிரம்மமுனி 
அழுகண்ணர் 
ஆகிய ஏழு சித்தர்களும் எழுவர் அணியாக கோரக்கரைச் சூழ்ந்து ஆர்ப்பாட்டமே செய்தனர்.

அவ்விதம் 
எளிமையாக 
கோரக்கர் எழுதிய 
16 நூல்களையும் 
தம்மிடம் ஒப்படைக்க வற்புறுத்தினர்.

சரியென வாக்களித்த கோரக்கர் 
அவர்களுக்கு 
உணவு படைத்தார்.

'அடை'
 அவர் தந்த
 உணவு.

 அந்த அடையில் அடைந்திருந்தது ரகசியமாய் 
அவர் கண்டறிந்த 
மூலிகை இலை.

உண்டவர் 
மயங்கினர்.

அவர்கள் 
எழுவதற்குள் 
16 நூல்களின் சாரத்தை இருநூறு பாக்களில் அடைத்து 
ஒரு தொகுப்பை உருவாக்கினார்.

குகைகளில் வைத்து பாதுகாக்கப் போவதாக அவர்கள் 
எடுத்துச் சென்று விட்டதால் 
இன்று கோரக்கரின் நூல்கள் பல  கிடைக்கவில்லை.


கோரக்கரின் 
பிறப்பு குறித்து 
குழப்பம் உண்டு.

பிராமண குலத்தில் பிறந்து பின்னர்
சீனராகி 
இறுதியில் 
கோனார் ஆனார்
 என்கிறார் கருவூரார்.

வடக்கே இருந்து 
வந்தவர் கோரக்கர். 
இவரே கோரக்கநாத் என்கிறார்கள் சிலர்.

வசிட்ட மகரிஷிக்கும் 
ஒரு குறப்பெண்ணுக்கும் பிறந்தவர் கோரக்கர்
என்பது 
போகரின் கருத்து.

கோரக்கரை 
'அனுலோமன்'
என்பார்கள்.

உயர்குலத் தந்தைக்கும் தாழ்ந்த குலத்
தாய்க்கும் பிறந்தவன் என்பது 
அனுலோமனுக்கு அர்த்தம்.

கோரக்கர் 
மராட்டியர் என்றும் வீரசிவாஜி அவரை வணங்கிப் போற்றியவர் என்றும் செய்தி உண்டு.

மிக கோரமான நோய்களைத் தீர்க்க மருத்துவம் கண்டதால் கோரக்கர் 
என பெயர் வந்ததாக 
ஒரு குறிப்பு உள்ளது.

அகத்தியரின்
18 மாணவர்களில் 
ஒருவர் என்றும் 
'எமநாட்டு சித்தர்'
என்பவரிடம் 
உபதேசம் பெற்றவர் என்றும் 
'அகத்தியர் சௌமிய சாகரம்'கூறுகிறது.

கார்த்திகை 
ஆயில்யத்தில் 
பிறந்த கோரக்கருக்கு மனைவியர் ஐவர்
மக்கள் அறுபதின்மர் என்கிறது 
'கோரக்கர் முத்தாரம்'

கொல்லிமலையிலும் சதுரகிரிமலையிலும் 
சீன தேசத்திலும் 
பல ஆண்டுகள் 
வாசம் செய்த 
கோரக்கர் 
தேச சஞ்சாரம் செய்த காலமும் 
போகருடனும்
பிரம்ம முனியுடனும்
தோழமையுடன்
சுற்றிய காலமும் 
அதிகம்.

மைசூர் 
சாமுண்டி மலையில் வாழ்ந்ததாக 
போகர் கூறுகிறார்.

இமயமலையும் 
பொதிகை மலையும் கோரக்கர் வாழ்வின் முக்கிய மலைகள் 

கோரக்கர் அருளிய
 நூல்கள் மொத்தம்
 40 என்கிறது 
 ஒரு குறிப்பு.

'சந்திரரேகை'
கோரக்கர் 
படைப்புகளில் சிறந்தது.
200 பாடல்களும் 
ஞான ரகசியங்களின் ஒட்டுமொத்த சாரம்.

'நமனாசத் திறவுகோல்' என்ற 
கோரக்கரின் நூல் பிற சித்தர் நூல்களின் மறைப்புகளைத் திறக்கவில்ல நூல்.

மருத்துவம்
ஜோதிடம்
ஆழ்ந்து பேசும் 
நூல்களையும் 
கோரக்கர் 
அருளியுள்ளார்.

கோரக்கர் சித்தர் 
சமாதி அடைந்த 
தலங்கள்
 எண்ணிக்கை 
 மிக அதிகம்.

 12 இடங்களில் 
அவை உள்ளன.

பொதிய மலை 
ஆனை மலை 
கோரக்நாத்திடல் (பாண்டியநாடு)
வடக்கு பொய்கைநல்லூர் பரூர்ப்பட்டி (தென்னார்க்காடு)

சதுரகிரி
பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
கோரக்பூர்
(வடநாடு) 

பேரூர் 
பட்டீஸ்வரர் கோயில் ஹரித்துவார் 
கோரக்கர்மலை (பாகிஸ்தான்)
கோர்க்காடு 
(புதுச்சேரி).

சித்தர்கள் 
பல இடங்களில் 
சித்தி அடைந்ததில் ஆச்சரியமில்லை.
 அவர்கள் 
சித்த வல்லமை
அப்படி.

வடக்குப் பொய்கைநல்லூரில் ஐப்பசித் திங்கள் (பரணி) பௌர்ணமி நாளில் 
சமாதி அடைந்ததாக குறிப்பு ஒன்று உள்ளது.

 

கோரக்கர் வழிபாடு
 நேபாள நாட்டில் 
பிரசித்தம்.
காட்மண்டுவில் 
கோரக்கர் ஆலயம்
 பிரசித்தி பெற்றது.

கூர்காங் 
இன மக்கள் கோரக்கர் 
 வழி வந்தவர் என பெருமிதம் கொள்கின்றனர்.

நேபாளி
பணத்தில்
நாணயத்தில் 
கோரக்கர் திருஉருவம் இடம்பெற்றுள்ளது.

கோரக்கரை மானசீக குருவாக வழிபட்டவர் மராட்டிய சிவாஜி. கோரக்பூரில் 
கோரக்நாத் மந்திர் 
 உள்ளது.
இது 
ஜீவ சமாதி கோயில்.

கர்நாடக அருளாளர் கோராகும்பர் 
கோரக்கரை வழிபட்டு உயர்ந்தவர்.

இஸ்லாமிய மக்களின் இதயத்திலும் 
 இடம் பெற்றிருப்பவர்     
 கோரக்கர்.

சித்தர்கள் போற்றிய 
 பெரும் சித்தர் கோரக்கர்.

அவரைத் தொழுவது 
 சித்தர் உலகையே
 பூஜிப்பதற்குச் சமம்.

(நிறைவு)



Leave a Comment