திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்கும அர்ச்சனை....அற்புதமான வீடியோ காட்சி 


திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் லட்ச குங்கும அர்ச்சனை நடந்தது.  திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக திருப்பதி அடுத்த திருச்சானூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் நாளை  கார்த்திகை பிரமோற்சவம்  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. 

தொடர்ந்து ஒன்பது நாட்கள் காலை, இரவு என்று 2 வேளையும் பத்மாவதி தாயார் பெரிய சேஷ, சின்ன சேஷம், சிம்மம், கஜ, கருட, முத்துப்பந்தல், கற்பக விருட்சம், உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருள உள்ளார். 19 ம் தேதி கோயிலுக்குள் பஞ்சமி தீர்த்தத்துடன்  பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரமோற்சவத்தையொட்டி கோயிலில் உள்ள ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை வேதமந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சஹஸ்ரநாமம் பூஜைகளுடன் லட்ச குங்குமார்ச்சனை செய்தனர். 

இதில் செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி, இணை செயல் அலுவலர் பசந்த்குமார், துணை செயல் அலுவலர் ஜான்சிராணி, உதவி செயல் அலுவலர் சுப்பிரமணியம், அர்ச்சகர்கள் பங்கேற்றனர். குங்குமார்ச்சனை நடத்துவதால் வருடாந்திர பிரம்மோற்சவத்தில்  எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெறும் என்பது ஐதீகம். வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது பத்மாவதி தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சத்தின் காரணமாக சுவாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே பத்மாவதி தாயார் பிரம்மோற்சவத்தின் போது எந்தெந்த வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலிப்பாரோ அந்த வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளிக்க உள்ளார். அதேபோன்று இன்று நடைபெற்ற லட்ச குங்குமார்ச்சனையிலும் ஏற்கனவே பக்தர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இணைய வழியில் லட்ச குங்குமார்ச்சனையில் பங்கேற்று பத்மாவதி தாயாரின் அருள் பெற்றனர்.

தொடர்ந்து மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடையே பிரமோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. இதில் புண்ணியாகவாசனம், ரக்க்ஷாபந்தனம் மற்றும் சேனாதிபதி உற்சவம் நடைபெற உள்ளது . நாளை காலை 8 மணியளவில் கொடிமரத்திற்கு அபிஷேகமும் 9.30 மணி முதல் 9.47  மணிக்கு இடையே  தங்க கொடிமரத்தில் பத்மாவதி தாயாரின் பிரமோற்சவ கொடியேற்றமும் நடைபெற உள்ளது. இரவு 8 மணி முதல் 11 மணிக்கு இடையே பிரமோற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக சின்ன சேஷ வாகன சேவை நடைபெற உள்ளது.



Leave a Comment