காற்றையே உடலாகக் கொண்ட காலாங்கி நாதர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

காலாங்கி நாதர் திவ்விய சரித்திரம் பாகம் - 2

சதுரகிரியில் 
காலாங்கி நாதர் 
மிச்சம் மீதமில்லாத ஆன்மீக உச்சத்தில் உயர்ந்து இருந்தார்.

ஒருமுறை 
காலாங்கி நாதர் தவத்தில் இருந்த 
சமயம்.
 
வணிகர் ஒருவர் காலாங்கி நாதரைத் தரிசித்து நின்றார்.

"என்னப்பா"
 என்றார் சித்தர்.

" சிவ ஆலயம் ஒன்றினைக் கட்ட ஆரம்பித்தேன்.
கட்டத் 
தொடங்கியது முதல் 
என் கட்டம் சரியில்லை.

சொத்து பத்து அத்தனையும் விற்றேன்.
பாதி கூட 
முடியவில்லை.

என்னால் 
எதுவும் செய்ய முடியவில்லை...

ஜோதியாய் தெரிகின்றீர்கள்... உதவுங்கள் சுவாமி " 

கெஞ்சினார்.
கதறினார்.
காலைப் பற்றினார்.
எத்தனை சொல்லியும் பற்றியதை விட்டாரில்லை.

பற்றிலா சித்தர் மனம் ஏனோ ஒப்பவில்லை. மௌனமாக இருந்தார்.

விடாக் கண்டரான வணிகர் விடவில்லை.
அவருடனேயே தங்கி பணிவிடைகள் தொடர்ந்தார்.

அவரது 
மன உறுதியையும் 
சிவ பற்றையும்
போற்றிய மாமுனி அவருக்கு உதவ 
உறுதி பூண்டார்.

சதுரகிரி மலையில் 
இல்லாதது இல்லை. சித்தர் ரகசியங்கள் ஆயிரம் ஆயிரம்.
மூலிகைகள் பல்லாயிரம்.  பலாபலன்கள் 
பலகோடி பல்லாயிரம்.

வணிகர் வந்தது
சதுரகிரிக்கு.
சரணடைந்தது 
கால தத்துவமறிந்த காலாங்கி நாதரிடம்.

பலன் இல்லாமலா போகும் ?

அரிய மூலிகைகளைப் பறித்து வந்து 
தைலமொன்றைத் தயாரித்த சித்தர் காலாங்கிநாதர் அத்தைலத்தைக் கொண்டு 
தங்கம் தயாரித்தார்.

அடடே....
கோடி சூரிய ஒளி.....!பொன்னிறம் தகதகவென 
ஓங்கி ஒளிர 
சதுரகிரியே திணறித்தான் போனது.

"வேண்டிய மட்டும் எடுத்துச் செல்.
உன் லட்சியம் 
நிறைவேற 
சிவன் அருள் புரிவார்.

வாழ்த்தி அனுப்பினார், வகாரத் தைலமெனும் பொன்னை உருவாக்கும் சித்தத் தைலம் கண்ட கலங்கி நாதமுனி.

வணிகர்
எடுத்துச் சென்றது போக மீதமிருந்தது தைலம்.

கெட்டவர்களுக்கும் 
பேராசை மனிதர்களுக்கும் 
போய்ச் சேர்ந்தால் 
தீயது மிகுமே 
எனக் கருதிய காலாங்கிநாதர் 
அருகில் இருந்த கிணற்றில் 
அதைக் கொட்டி 
கனத்த பாறை ஒன்றால் அதை மூடி 
நாற் திசைகளிலும் நான்கு தெய்வங்களைக் காவலுக்கு வைத்தார்.

ஆம்...
தெய்வங்கள் கூட 
அவரது ஏவலுக்கு காத்திருந்தன.

இன்றும் 
சதுரகிரி செல்வோர் மூலிகைக் கிணற்றையும் மூடிய பாறையையும் வராகி, காளி பேச்சியம்மன், கருப்பணசாமி 
எனும் காவல் தெய்வங்களையும்
கண்ணுற்று
வணங்கலாம்.

தனித்திருப்பதும்
தவமிருப்பதும் சித்தர்களின் 
ஏகாந்த நிலை.

காலாங்கி நாதரும் சதுரகிரியிலேயே
நீண்ட தவமிருக்க அமர்ந்துவிட்டார்.

தன்னிலை மறந்த
அவரைத்
தட்டி எழுப்பியது 
ஒரு கரம். 

அக்கரம் 
குரு திருமூலநாதர் திருக்கரம்.

'காலாங்கி.....' 
சித்தர் மரபு 
உன்னோடு முடிந்து விடக்கூடாது.
வளர வேண்டும்.
ஆல்போல் 
தழைக்க வேண்டும். 

நீ என்னிடம் உரிமையோடு கற்றதை நன்காய்ந்து தேர்ந்தெடுத்து சீடர்களுக்கு வழங்கு.

உபதேசி.

நல்லவர்களை உருவாக்கு.
நாடு பேதம் வேண்டாம்.

சீனாவிற்குச் செல். அங்கு பணியாற்று.
உன் கடமையைச் செய்.

உபதேசித்து மறைந்தார் உன்னத குருவாம் திருமூலநாதர்.

அதன்பின்னர் காலாங்கிநாதர் 
சீனா போனார்.

அம்மக்கள் மேம்பட உபதேசம் அருளினார். அவர்கள் மாண்புற 
மருந்துகள் தந்தார்.

சீன தேசத்திற்கு 
எப்படிப் போனார் ?மாயமில்லை. மந்திரமில்லை.

ககன குளிகை 
என்னும் 
அதிசய மருந்து 
அவர் 
கைவசமிருந்தது.
அதன் மூலம் 
சீனா சென்றார்.

உலகெங்கும் 
உயரப் பறந்தார்.
உலகம் உய்விக்க!

அதற்கெனப் 
பிறந்தவர் போல் 
உலா வந்தார்.

அக்னி வேள்வி நடத்துவதில் வல்லவர் கலாங்கி நாதர்.

ஒருமுறை 
அகத்தியருக்காக 
கங்கை நதிக்கரையில் 
மரகத மலை அடிவாரத்தில் 
அன்னை ராஜேஸ்வரிக்கு அக்னி வேள்வி நடத்தி அகத்திய முனிவரின் ஆசியருள் பெற்றார். அவர்தம் 
உள்ளத்தில் அமர்ந்தார்.

கால் என்றால் காற்று.
அங்கி என்றால் உடை.
காற்றை அங்கியாக
அணிந்தவரே 
காலாங்கி நாதர். 

நம் உடலைப் போல் தசைகளால் ஆனதல்ல
அவர் உடல்.
காற்று அணுக்களால் ஆனது.
உணரலாம்.
தொட முடியாது.
இஃதோர் 
உயர் நிலை. 
உயர் சித்தர் நிலை.

ஒருகட்டத்தில் 
மூவாயிரம் வருடம் 
சமாதி நிலையிலிருக்க ஆசை கொண்டார் காலாங்கி நாதர்.

உடனே தனது 
சீடர் போகரை 
சீனாவுக்கு வரவழைத்து 
தன் பணி தொடரக் கோரினார்.

அதன்பின்னர் 
குருநாதர் 
சீனாவிலேயே 
சமாதி கொண்டார்.

சீனாவில் 
காலாங்கி நாதர் 
சமாதி இருக்கும் 
முக்காதக் கோட்டைக்கு அடிக்கடி செல்வது போகரின் வழக்கமாம்.

போகர் 
செல்லும்  
போதெல்லாம் 
சமாதி கதவு 
தானாகத் திறக்க வாத்தியங்கள் இன்னிசை எழுப்ப காலங்கி நாதர் ஒளிமயமாய் தகதகவென பொன்னிறமாய் 
ஆயிரம் கோடி சூரியனாய் 
காட்சி அளிப்பது வழக்கம்.

காலாங்கி நாதரின்
நூல்கள் பல 
நம் கைக்குக் கிடைக்கவில்லை.

வைத்திய காரியம் 
ஞான சாராம்சம் 
வகாரத் திரவியம் ஞானம் 
கற்பக விதி 
ஞான பூஜா விதி 

தண்டகம் 
பகரணி 
இந்திர ஜால ஞானம் தீட்சா விதி 
உபதேச ஞானம் 
சூத்திரம் 
ஞான விந்த ரகசியம் ஞான சூத்திரம் 
ஆகிய 
அரும்பெரும் நூல்கள் அவரது அருளாற்றலுக்குச் சான்று.

சதுரகிரி குறித்த காலாங்கி நாதர் பாடலொன்று....
அவர்தம் ஆன்மீக அனுபவச் சான்று.

"பாரப்பா 
அக்குகையின் 
உள்ளே செல்ல
பாம்பாட்டிச் சித்தரும் தங்கியிருப்பார்.

தேரப்பா.... 
நீ வணங்கி அதன் மேற்காக திரும்பவே 
அத்திரியின் குகை 
தானுண்டு...ப

பாதை வழி நேராய் நாதாந்த சித்தர் 
பதியான குகை தெரியும்.

பார்த்துக் கொண்டு வேதை நீ அடையாமல் உள்ளே சென்றால் வேதாந்த சித்தருடன் குதம்பைச் சித்தர் போதையுள்ள ஞானச் சித்தர் அடிவணங்கி...."

இப்படிப் போகும் பாடல்.

சதுரகிரியின் 
ஆன்மீகச் சிறப்பை இப்படி
அடி அடியாய் அடியெடுத்து வைத்து சித்தத்தைத்
துடிக்க வைக்கிறது.

உலகப் புகழ் 
தத்துவ ஞானி கன்பூசியஸ் 
நீண்டகாலம் வாழ்ந்திட காலங்கி நாதரே காரணம் 
என்னும் ஒரு கருத்து ஆன்மீக உலகில் உண்டு.

காலங்கி நாதர் தான்
ஞானி கன்பூசியஸ் 
என்றும்
ஒரு குறிப்பு உண்டு.

காலங்கிநாதர் 
சித்தி அடைந்தது
சீனநாட்டில் 
என்றும் 
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் 
என்றும் 
போகரே
இரு இடங்களைச்
சொல்லியுள்ளார். 

சேலம் அருகில் இளம்பிள்ளை கிராமத்தில் 
அமாவாசைக் கோயிலிலும் 
காலாங்கி  நாதரின் ஜீவசமாதி உள்ளது.

காலாங்கி நாதருக்கு கஞ்சமலை சித்தர் 
என்ற பெயரும் உண்டு.

சேலம் 
இளம்பிள்ளை மலையே கஞ்சமலை.

பற்பல இடங்களில் சித்தியாவது 
சித்தர்களுக்கு 
வழக்கம் என்பது 
ஏற்புடையது என்பதால் 
காலாங்கி நாதரின் அருள் பெற நாம்
சீன தேசம் செல்ல
வேண்டியதில்லை.

அருகில் 
கஞ்சமலை இருக்கு.
காஞ்சிபுரம் இருக்கு. சதுரகிரி இருக்கு.

கஞ்சமலை செல்வோம்.
காஞ்சிபுரம் செல்வோம்.
சதுரகிரி செல்வோம்.

தெய்வ நிலையில் உலவும் 
காலாங்கிநாதர் 
அருள் பெறுவோம்.
 



Leave a Comment