தீராத கடன்களைத் தீர்க்கும் கோலவிழி அம்மன்!


சென்னை  மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோலவிழி அம்மன் திருக்கோயில். அக்கோவிலில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்குகிறாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். மேலும் இத்திருத்தலத்தில் ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

மயிலைக்கு காவலாய் அமர்ந்து எல்லையையும், பக்தர்களையும் காத்து அருளைவாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள் கோலவிழியம்மன். இத்திருக்கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைத்திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அம்மன் தரிசனம் தருகிறாள். மேலும் ஆடி மாத விழாவாக அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெறுகிறது. மேலும் கோலவிழி அம்மனுக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராத கடன்கள் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 



Leave a Comment