சிவனென்று இருந்தார்.. சிவமாகிப் போனார்.


- "மாரி மைந்தன்" சிவராமன்

 

பட்டினத்தார் கதை பாகம் - 6

சேந்தனார்.
ஞாபகம் இருக்கிறதா ?

பட்டினத்தார் 
வணிகர் குலச் செம்மலாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் 
அரசனுக்கு நிகராக அருளோடு பொருளோடு 
வணிக ஆட்சி 
செய்த காலத்தில் 
தலைமைக் கணக்கராக உடனிருந்து உதவியவர்.

பட்டினத்தார்
துறவறம் பூண்ட பின்னர் 
அவரின் 
சொத்துக் கணக்கைத் தெளிவுறச் 
சொல்ல முடியாததால் 
மன்னனின் கோபத்துக்குள்ளாகிச் சிறையில் 
தனிமையில் தள்ளப்பட்டார்.

பயந்த நிலையில் 
வாழ வழியின்றி 
அவரது பத்தினியும் புத்திரனும் 
நாட்டைவிட்டே
தம்மை 
நாடுகடத்திக் கொண்டனர்.

தேச சஞ்சாரத்தில் 
மிகவும் பிடித்த திருவெண்காடு வந்தார் பட்டினத்தார்.

சேந்தனார் மனைவியும் மகனும் 
பட்டினத்தார் 
வருகையை அறிந்து 
வந்து வழிபட்டனர்.

நடந்த கதையைக் கண்ணீருடன் சொல்லினர்.

அவர்தம் துயர் நீக்க
யாரிடம் செல்வார் பட்டினத்தார் ?

வேறு யாரிடம் சொல்வார் பட்டினத்தார்.

நெஞ்சினிலிருக்கும் நஞ்சுண்ட மூர்த்தியை சிந்தையில் துதித்தார்.

தும்பிக்கையோனுக்கு அக்கணமே தந்தை 
தந்தி கொடுத்தார்.

பிள்ளையார்
தும்பிக்கை நீட்டி சிறையிலிருந்த 
சேந்தனாரை விடுவித்தார்.

தும்பிக்கையோனுக்குநன்றி சொன்னார் பட்டினத்தார்.

நம்பிக்கையோடு பட்டினத்தாரின் 
பாதம் பணிந்தது 
சேந்தனார் குடும்பம்.

"சேந்தனாரே....
சோர்வடைந்து விடாதீர் ... பரமன் 
அருள் தருவான்.

இனித் தொல்லை 
உமக்கு இருக்காது. எப்போதும் 
பிள்ளையாரின் பார்வை உமக்கிருக்கும்.

தில்லை சென்று 
வாழ்க்கை நடத்து...

தினந்தோறும் 
சிவனடியார் ஒருவருக்கு பசியாற்று...

பரமன் வருவார்...
பாதம் தருவார்.

நல்லதே நடக்கும்"

சேந்தனார் குடும்பம் 
தில்லை சென்றது.
 
ஆலயப்பணி 
அடியார் பணி 
விறகு வணிகம் 
குறையின்றித் தொடர்ந்தது.

பட்டினத்தார் 
கூறிய மாதிரி 
பரமன் வருவார் 
எனக் காத்திருந்தார்.

ஒரு நாள் 
முதியவர் ஒருவர் 
வந்தார்.

அவருக்கு களி தந்தது சேந்தனார் குடும்பம்.

களிப்புடன் உண்டார். கொஞ்சம் 
மேலாடை விரித்து 
கட்டியும் கொண்டார். 

களியமுதைத் 
தன்முன் அப்போது வந்தவர்கெல்லாம் 
தந்து மகிழ்ந்தார். 

பின் 
சேந்தனார் கண்முன்னே விண்ணில் மறைந்தார்.

வந்தவர் 
எல்லாம் வல்ல 
இறையனார் அன்றி
வேறு எவர் !

சேந்தனார் 
பெருமையை 
உலகறியச் செய்து 
பின்னொரு நாளில் ஆட்கொண்டார். அருள்புரிந்தார்.

முக்தி பெற்றது 
சேந்தனார் குடும்பம்.
அதற்கு 
நல்வழி காட்டிய 
கருணை வள்ளல் பட்டினத்தாரைத் துதித்தபடியே.

ஞானப் பாதை காட்டிய  பத்திரகிரியாரையும் தில்லைக்கு வழிகாட்டிய 
சேந்தனாரையும் 
தனக்கு முன்னரே 
இறைவன் ஆட்கொண்டது பட்டினத்தாரின் மனத்தில் சோர்வை உண்டுபண்ணியது.

'எனக்கு எந்நாளோ...'
என 
இறைவனைத் 
தில்லைநாதனையே
நச்சரிக்க ஆரம்பித்தார் பட்டினத்தார்.

பரமனே ஒரு நாள்
கனவில் தோன்றி 
"அன்பரே...
பேய்க்கரும்பு 
தித்திக்கும் ஓரிடத்தில்... 
அதுவே உன் 
முக்கிய தலம்..."
என சொல்லி மறைந்தார்.

தில்லைக்குப் போனார் பட்டினத்தார்.

அவருக்கு அடுத்த நிலை அங்கு காத்திருந்தது,

பேச்சில்லை... உணவில்லை சிந்தை முழுக்க சிவனடி... என்றிருந்த 
பட்டினத்தாருக்கு மனக்கவலை கூடியது.

ஒரு நாள் 
தில்லையம்பதியைத் தரிசித்துவிட்டு 
கோயில் தூண் மேலே சாய்ந்திருந்தார். ஓய்ந்திருந்தார்.

அப்போது அவருக்கு 
லேசாய் பசித்தது.
அப்படிப் பசித்து 
வெகுகாலம் இருக்கும்.

உச்சிகால பூஜை அப்போதுதான் முடிந்திருந்தது.

ஒரு பெண் 
பட்டினத்தார் 
அருகில் வந்தாள். 

கையில் 
கோயில் பிரசாதம்.
பசியிலிருந்த பட்டினத்தாருக்குத் தந்தாள்.

அவளது 
நடை உடை பாவனை பட்டினத்தாருக்கு
வித்தியாசமாய் பட்டது.

அத்தாயின் முகம் 
பார்க்க நினைத்து 
தலை உயர்த்திய போது உணவைத் தந்து விட்டுத் 
திரும்பத் தயார் ஆனாள்.

சிறிது நடை போட்டாள். திடுமென 
மறைந்து போனாள்.

மறைந்த திசையில் 
மனத்தைப் பதித்தார் பட்டினத்தார்.

உமையவள் 
சிவகாம சுந்தரி தான் 
பெண் வடிவில் வந்து 
அமுது படைத்தவர் என்று புரிந்து போனது.

" ஐயையோ... 
அன்னை வந்தும் 
கவனியாது இருந்து விட்டேனே!
உணரத் தவறி விட்டேனே !!
பாவி..பாவி நான்..."
என 
மனதிற்குள்ளேயே 
புலம்ப ஆரம்பித்தார்.

அடுத்து சென்றது 
காஞ்சிபுரம்.

அங்கு அவருக்கு 
அன்னமிட்டது
காமாட்சி அன்னை.

இம்முறை ஏமாறவில்லை. இறைவியைத் துதித்து மகிழ்ந்தார்.
சித்தி பெற 
சத்தியம் வாங்கினார்.

கஞ்சித் திருவந்தாதி திருவேகம்பமாலை
கஞ்சித் திருவகவல் முதலிய பொக்கிஷங்களைக் காஞ்சியில் அருளினார்.

தலயாத்திரை தொடர்ந்தது. தவயாத்திரை 
நிறைந்து வந்தது. 

தேடுவதை நெருங்கிக் கொண்டிருப்பதாய் 
மனத்தில் பட்டது.

திருகாளஹஸ்தி 
செல்ல விரும்பி 
பயணம் தொடங்கினார்.

காட்டு வழிப் பயணம்.
கண்ணப்ப நாயனார் வாழ்ந்திருந்த காடு.

காடு வாழ் 
மிருகங்கள் எல்லாம் 
அவருக்குப் பணி செய்தன.

பாம்புகள் 
மணிவிளக்கு ஏந்தின. யானைகள் பாதையைச் சீர்படுத்தின.
புலிகள் 
பட்டினத்தாரின் 
திருவடி பதியும் பகுதியை வாலால் சுத்தப்படுத்தின. பறவை இனங்கள் 
மேலே பறந்து 
நிழல் தந்தன.

வியந்தபடி 
காளகஸ்தி ஈஸ்வரனைத் துதித்தபடி 
'என்ன செயல்....
என்ன செயல்....'
என மனத்தில் பாடியபடி 
காடு வழி நடந்து 
காளகஸ்தி நாதரை 
வணங்கித் துதித்து மகிழ்ந்தார்.

அடுத்து 
திருவொற்றியூர்.
மனம் 
ஒன்றிப் போனது ஒற்றியூர் நாயகனிடம்.

ஒற்றியூர் தெருவெல்லாம் மெல்ல நடந்து 
பூரித்துப் போனார்.

ஞானப் பாடல்கள் 
பாடி மகிழ்ந்தார்.

'பிறவிப்பிணி தீர்வதற்கு திருவொற்றியூரே 
அருள்மருந்து'
என்றிருந்தார்.

பல சித்துக்கள் புரிந்தார். 
பார்த்தவர் பாதம் ஒற்றினர். 
கேட்டவர் வியந்து ஒன்றினர்.

திருவொற்றியூரில் தோழர்கள்  பெருகினர்.

ஆம்....
வழக்கம்போல் 
சின்னஞ் சிறுவர்கள் தான் 
பட்டினத்தாரின் 
பிஞ்சுத் தோழர்கள்.

பசு மேய்க்கும் சிறுவர்களுக்குப்
பட்டினத்தார் மீது 
கரிசனம் நிறைய. 

'தாத்தா 'என்று 
அழைப்பார்கள்
சில குட்டிப் பையன்கள்.
'சாமி 'என்று 
கூப்பிடுவார்கள் 
மீதமுள்ளோர்.

மணலைச் சர்க்கரையாக்கி அவர்களுக்குத் தருவார்.

அவர்களை அழைத்து 
குழி பறிக்க சொல்வார். 
குழியில் அமர்ந்து 
மண் போட்டு 
குழியை
மூடச் சொல்வார்.

அவர்கள் 
மறு பேச்சின்றி 
அப்படியே செய்வார்கள்.

முழுதாய் மூடிய பின்னர்
திரும்பிப் பார்த்தால் 
மணல் குன்றின்மேல் நின்றபடி 
கைதட்டி அழைப்பார்.
கண்மூடிச் சிரிப்பார்.

இப்படி பலமுறை 
மாயம் காட்டினார். சிறுவர்களின் 
அன்பில் திளைத்தார். 

அன்று 
அப்படித்தான்...

சிறுவர் படையோடு 
சித்தாடல் காட்ட 
ஓரிடம் சென்றார்.

கரும்பு விளைந்த 
கழனி சில 
இடையில் வந்தன.

போகிற போக்கில் 
கரும்பு ஒன்றை 
ஒடித்தார் பட்டினத்தார்.

"இது பேய்க் கரும்பு... கசக்கும் ...
வேண்டாம் தாத்தா ... வேண்டவே வேண்டாம்"
சிறுவர்கள் தடுத்தனர்.

கரும்பை உடைத்து சுவைத்தார் .... இனித்தது.

உள்ளத்தில் உற்சாகம் உடம்பெல்லாம் பரவியது.

சிறுவர்களுக்கும் தந்தார். 
அவர்கள் பயந்தபடி அடிக்கரும்பைச் சுவைத்தனர்.  

"தாத்தா தித்திக்குது..."
ஆச்சரியத்தோடு
கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

அடுத்து கடற்கரை 
வந்தார்கள்.

மண்குழி 
விளையாட்டு ஆரம்பமானது .

சிறுவர்கள் சூழ்ந்திருக்க சிறுவர்கள் பறித்த குழியில் பட்டினத்தார் அமர்ந்தார்.

என்றும் போல 
'ஏய்..ஹேய்... ஓய் '
என்று கத்தியவாறு சிறுவர்கள் 
மண் அள்ளிக் 
குழியை நிரப்பி மூடினர்.

வழக்கம் போல்
திரும்பினர்.
பார்த்தனர்.
மணற்குன்றில்
பட்டினத்தாரைக் காணவில்லை.

தேடினர்.
சுற்றுமுற்றும் 
ஓடித் தேடினர். பட்டினத்தார் எங்கும் புலப்படவில்லை. வெளிப்படவில்லை.

" தாத்தா "
என அவர்கள் கதறியது ஊருக்குள் கேட்டது.

பெரியவர்கள்  
ஓடி வந்தார்கள்.

கலங்கியபடி சிறுவர்கள் காத்திருக்க 
மூடிய குழியை 
மீண்டும் பறித்தனர்.

அங்கேயும் 
பட்டினத்தடிகள் இல்லை. 
அவரது உடல் இல்லை. பதிலாக....
சிவலிங்கம் ஒன்று ஒளிபெருக்கிக் கொண்டிருந்தது.

பெரியவர்களுக்குப் புரிந்தது. சிறுவர்களுக்குச் சொன்னார்கள். 

"சுவாமி சிவன் 
என்று இருந்தார் 
இன்று சிவம் ஆகிவிட்டார்"

ஊர்மக்கள் 
சிவனடியார்கள் 
'ஹர...ஹர...'
என ஓங்கி ஒலித்தனர்.

"இனி 
தாத்தா வரமாட்டாரா ?"
மணல் தள்ளி விளையாடிய 
சிறு குழந்தை 
கவலையாய் கேட்டது.

" இல்லை...
 அவர் சாமி ஆகிவிட்டார்.
 நம் கண்களுக்குத் தெரியமாட்டார் ..."

அப்பாக்காரர் 
தப்பாகச் சொன்னார்.

பட்டினத்தடிகளை
இன்றும் எவரும் 
பார்க்கலாம்.

அருவுருவாய் இருக்கும் அவர் 
அதற்கு மனம் 
வைக்க வேண்டும்.

கால நேரம் கருதாமல் 
சிவ சிந்தையில் இருந்தபடி 
நிதம் 
அன்னதானம் செய்தபடி 
வாழ்வாங்கு வாழ்வோருக்கு 
காட்சி தருவார்.

மாயமான -
லயமான இடத்தில் தரிசிப்போருக்கு 
மகிழ்ச்சி மயமான 
வாழ்க்கை கிட்டும்.

(பட்டினத்தார் கதை முடிவுற்றது)



Leave a Comment