பிள்ளையார்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா...


திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு 5-ம் நாள் இன்று காலை சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று கொடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடி மரத்தில்  கொடியேற்றத்துடன் சதுர்த்தி பெருவிழா கோலாகலமாக துவங்கியது.விழா துவங்கிய நாளில் இருந்து தினசரி இரவு திருநாள் மண்டபத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளளும், பகலில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

வழக்கம்போல் இன்று 5-ம் நாள் விழாவை முன்னிட்டு கோயில் திருநாள் மண்டபத்தில் உற்சவரான ஸ்ரீ கற்பக விநாயகரும், ஸ்ரீசண்டிகேஸ்வரரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர தீபம், கும்ப தீபம், நட்சத்திர தீபம் காண்பித்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து  மகா ஏழு முக கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து திருநாள் மண்டபத்திலிருந்து பக்தர்கள் ஸ்ரீகற்பக விநாயகரை தோளில் சுமந்து, இரு மாடுகள் பூட்டிய வெள்ளிக் கேடகத்தில் அமர வைத்து பின்னர்  மங்கள வாத்தியங்களுடன் கோவிலை சுற்றி நான்கு ரத வீதியில் பவனி வந்த தெய்வங்களை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து மனமுருக கற்பக விநாயகரிடம் வேண்டி வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான 6-ம் நாள் நாளை  வெள்ளிக்கிழமை மாலை கஜமுக சூரஸம்காரமும். 9ம் நாள் வரும் திங்கட்கிழமை காலையில் திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளும், மாலை 4 மணியவில் திருத்தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

விழாவின் 10ம் நாள் காலையில் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.



Leave a Comment