கூடுவிட்டுக் கூடு பாய்ந்த சித்தர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

'கூடுவிட்டு கூடுபாய்தல்' சித்தர்களின் சித்தாடல்களில் முக்கியமானது.

ஒரு முறை அல்ல
பல முறை 
கூடுகள் விட்டு கூடுகள் பாய்ந்த 
சித்தர்களும் உண்டு.

பிறர் துயர் கண்டு இரங்கும் சுபாவமும்,
கூடு விட்டு கூடு பாயும் பேராற்றல் மூலம் 
சித்தர் மகத்துவத்தை வெளிப்படுத்துவதுமே  
இச்சித்தாடலின் 
அடிப்படை அம்சம்.

ஒரு நற்காரியத்திற்காக இறை விருப்பப்படி 
கூடுவிட்டு கூடு பாய்வது சித்தர் மரபு.

பலமுறை 
கூடுவிட்டுக் கூடு பாய்ந்த ஒரு மாபெரும் சித்தரை இப்போது தரிசிக்க இருக்கிறோம்.

அதற்காகவே 
இனி வருகிறது 
ஒரு நெடுங்கதை.

பாண்டிய நாட்டின் மன்னன் வீரசேனன்,
அவன்  மனைவி குணவதி.

ஒருநாள் 
நகர்வலம்
சென்று திரும்பிய மன்னவன்
தள்ளாடி வந்தான். தன்னிலை மறந்தான்.
 சில மணித்துளிகளில் மரணித்தும் போனான்.

இளவயது மன்னன்...
இனிய மனது உள்ளவன் 
இறந்த செய்தி  மகாராணியை, மக்களை ஓலமிடச்  செய்தது.

அவர்களின் அழுகுரல் விண்ணை எட்டியது.

அப்போதுதான் 
அந்த சித்தர் விண்வெளியில் பயணித்திருந்தார்.

மக்களின் துயர் கண்டு
இரங்கினார்.
ஒரு கணம் யோசித்தார். இறை விருப்பம் மனதில் விரிந்தது.
தரை இறங்கினார்.

அக்கணமே 
மன்னன் 
சாவை முறியடிக்க 
அவன் உடலில் உட்புகுந்தார்.

ஆம்....
தன் உடலை விட்டு மன்னன் உடல் புகுந்தார். கூடு விட்டுக் 
கூடு பாய்ந்தார்.

அதே கணத்தில்
தான் தவமிருக்கும்
சதுரகிரியில் 
அந்தரங்க சீடன் 
குருராஜன் என்பானை நியமித்து 
தன் உடலை 
பத்திரமாக பாதுகாக்கச் சொன்னார்.

மன்னன் உயிர்பெற மாநிலமே மகிழ்ந்தது. மக்கள் துள்ளி குதித்தனர். மகாராணி குணவதி எல்லையில்லா குதூகலம் கொண்டாள்.

ராஜ வாழ்க்கை....
அழகின் விளிம்பில் இன்பத்தின் உச்சத்தில் அதிசயம் காட்டிய
இளம் மகாராணி
அருகில்.....மிக அருகில்.

இப்படியே இன்பகரமாக நாட்கள் நகர்ந்தன...
ஆடலும் பாடலுமாய்
அரசும் ஆட்சியுமாய்.

பட்டத்தரசிக்கு
மதிமயக்கும் மன்மதனாய் 
தித்திக்கும் தேவனாய் மாறிப்போனார் சித்தர்.

இருப்பினும் 
அரசியின் மனதில் சந்தேகம் இருந்தது.

ஒருநாள் கேட்டே விட்டாள்!

"உயிர் நாதா....
அன்று,,,,,
நீங்கள் இறந்து விட்டதாக
ராஜ வைத்தியர் சொன்னார்.
நானும் உடலைத் 
தொட்டுப் பார்த்தேன். 
சவமென உணர்ந்தேன். நீங்கள் மரணமடைந்து விட்டதாகவே நினைத்தேன். 
கதறித் துடித்தேன்.

நல்லவேளை 
காலன் உங்களைக் கைக்கொள்ளவில்லை.

அந்நிகழ்வுக்குப் பிறகு
உங்கள் ஆற்றலும் அணுகுமுறையும் வேறாய் இருக்கிறது.
அனுதினமும் இதை உணர்ந்து துய்க்கிறேன்.

ஆனால் என் மனம் அண்மைக்காலமாக
துன்புறுகிறது.

கோபமே என் 
மன்னவனின்
மரபு குணம்.
அது இப்போதெல்லாம் உங்களிடம் 
அறவே இல்லை. 

முன்பு உங்கள் நாட்டம் வேறு.
இப்போது உங்கள் நாட்டம் புதிது.
ஆம் அரசே.....

சொல் புதிது...
பொருள் புதிது...
ஆற்றல் புதிது....
அனுபவம் புதிது.

போர், நாடு , மக்கள் என 
என்னை விட்டுத் தள்ளிப் போன நீங்கள்
இப்போது அள்ளி அள்ளி அணைக்கிறீர்கள்.!

என்ன நடந்தது ?
எனக்கு விளங்கவில்லை..

அறிவால் அரச சபையும் அன்பால் அந்தப்புரத்தையும் மாற்றியிருப்பது அறியமுடிகிறது."

வீரசேனன் உருவில் இருந்த சித்தர்
இதுவே சரியான 
தருணம் என 
உண்மையைச் 
சொன்னார்.

"மகாராணி..... 
விஷப்பாம்பு ஊறிய 
பூ ஒன்றை முகர்ந்தாலே உன் கணவன் இறந்து போனான்.

பின் பிழைத்ததும் இப்போது இருப்பதும் இறை உத்தரவு ."

சித்தரின் பதில் 
அரசிக்கு மேலும்
குழப்பம் தந்தது,
அவள் கண் கலங்கிப் போனாள்.
அதன் பின் புலம்பி ஓய்ந்தாள்.

ஆனால் அடுத்த முறை அதே கேள்வியைக் கேட்டபோதும்....
கேட்டு கேட்டு நச்சரித்த போதும்... 
மறைக்க முடியாமல்
சித்தர் உண்மையைப் போட்டு உடைத்தார்.

அரசியே,...
கவனமாகக் கேள்.

இவ்வுடல் உன் தலைவன் வீரசேனனுக்கு உரியது.

ஆனால்
உள்ளிருக்கும் உயிர்,
வழி நடத்தும்
ஆன்மா என்னுடையது.
நான் ஒரு சித்தன்.

நீ சேர்ந்தது 
வீரசேனனின் உடலுடனேயே...!

உறவும் பிணைப்பும் உடலுக்கு உரியன. உயிருக்கு அல்ல. ஆன்மாவுக்கு 
களங்கம்  கிடையாது."

"உயிரும் ஆன்மாவும் 
வேறு வேறா ? ஒன்றா ??"
அந்த சூழலிலும்
சந்தேகம் கேட்டாள் ராணி.

"இரண்டும் ஒன்றுதான். உயிர் தமிழ்மொழி ....
ஆன்மா வடசொல்."
எளிதாய் சொன்னார் ஞானி,

உடலின் உண்மையையும் உயிரின் மேன்மையையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். 

நடந்தது அனைத்தையும் நயமாக எடுத்துச் சொல்லி,
"உன்னைச் சொல்லிக் குற்றமில்லை 
என்னைச் சொல்லிக் குற்றமில்லை.
நடப்பது யாவும் கடவுள் கட்டளை"
என நியாயப்படுத்தினார்.

அரசிக்கு குற்ற உணர்வு ஏற்படவில்லை. 
கற்பு கெட்டு விட்டதாகத் தோன்றவில்லை. 
சித்தரின் கூற்று
அவளுக்கு 
ஏற்புடையதாக இருந்தது.

அரசு சுகமும் 
ஆட்சி சுகமும் 
அந்த சித்தர் தந்த 
முழு சுகமும் 
அவளை அப்படிக்
கட்டிப் போட்டிருந்தன.

சாகச சித்தரிடம் 
சமரசம் கொண்டால் தான் சகல பாக்கியங்களும் நிரந்தரமாகும். விதவையாக முடங்காமல் பட்டத்து மகாராணியாக பவனி வரமுடியும் என கணக்குப் போட்டாள்.

விதவைக்கோலம் கண்ணில் விரிய 
வேகமாய் முடிவெடுத்தாள் சாகசக்காரி.

வீரசேனன் உடலை
ஆரத் தழுவினாள் 
உயிராய் 
உள்ளிருந்த சித்தரும் 
கிளர்ந்து எழும்படி.

சகலமும் உணர்ந்தவர் என்றாலும் 
அந்த அரவணைப்பில் கொஞ்சம் 
கிறங்கிப் போனார் சித்தர்.

"ஆமாம் சாமி... 
உங்கள் உடல் 
சதுரகிரியில் பத்திரமாக இருக்கும் தானே...?
சீடன் கவனம் 
அதிலேயே இருக்குமா...?? சிக்கென கேள்விக்கணைகள் தொடுத்தாள்.

"பயமில்லை... பாதுகாப்புக்கும் குறைவில்லை..."

" எனக்கு என்னவோ பயமாயிருக்கிறது...
யாரேனும் செத்த உடம்பு என்று எடுத்துச் சென்று எரித்து விட்டால்...." சந்தேகமாய்  கேட்டாள்.

" முடியாது..... 
யாராலும் முடியாது.....
காயசித்தி அடைந்த தேகம்.... 

அதனை எரிக்க  
சாதாரண தீயால் முடியாது."

"அப்படியா...?!!!!"
கண்கள் விரிய கேட்டாள்.

"என் உடல் 
சாமான்யமாக எரியாது.

வெடி உப்பமும் 
குங்கிலியமும்
பொரி காரமும்
போட்டுத் தூளாக்கி தேகத்தில் பூசவேண்டும். பின் 
விரலி இலைகள் 
பரப்பி மூடவேண்டும். அதன் பிறகு 
கட்டைகளை அடுக்கி 
தீ மூட்ட வேண்டும்.
அப்போதே சிதை
எரியும்.

இந்த ரகசியம் 
சித்தர்கள் தவிர
யாருக்கும் தெரியாது. இப்போது உனக்குத் தெரியும்.

நீ என் உயிரை காக்க வந்தவள். 
போக்க வல்லவள் அல்லவே"
கடைக்கண் சாய்த்து கயல்விழியாளிடம் கிசுகிசுத்தார்.

காமக்கிழத்தியிடம் ரகசியத்தை சொல்லிவிட்டு  ரகசியமாய் சிரித்தார், சிதம்பர ரகசியம் 
அறிந்த மகா சித்தர்.

அந்த ரகசியம் 
தீயாய் படர்ந்தது 
அரசியின் உள்ளத்தில்.

அழகிய இளைஞனாய் அரசன்...
அமர்க்களமாய் 
அரசு கட்டில்.
ஆர்ப்பரிக்கும் 
ராஜ வாழ்க்கை.,,,
எல்லையில்லா இன்பம்.

அரசன் உருவில் இருக்கும் இந்த புதுக்கணவன் பிரிந்தால் எல்லாம் 
பறி போகும்.

உடல் வேறு உயிர் வேறு என்றான பின்
எவனாக
இருந்தால் என்ன?

கணவனைப் பிரிய எந்த மனைவிக்கு மனம் வரும்?

சொத்து சுகம் குறைய யாருக்குத்தான் 
மனம் வரும்?

அரசியின் மனதில் முன்னம் எழுந்த தீ
அதீதக் கொழுந்தாய் படர்ந்து எரிந்தது.

வெளிக்காட்டிக்
கொள்ளாமல் 
ஒரு திட்டம் தீட்டினாள் - ரகசியமாக .

அவளது திட்டம் 
மிக எளிமையானது. 
கனகச்சிதமானது.

நம்பிக்கையான
வீரர்களை அழைத்தாள்.

சித்தர் 
உடல் இருக்கும்
இடம் சொல்லி 
எரிக்கும் முறைகளை எடுத்துச் சொல்லி கொஞ்சம் கூட விட்டுவிடாமல் 
எரித்து வரச்சொன்னாள்.

அதேசமயம் 
வருவதாக
கூறிச் சென்ற
குரு காணவில்லையே 
என புலம்பியபடியே 
சீடன் குருராஜன் 
குருவைத் தேடி 
மதுரை நோக்கி 
சென்று விட 
வீரர்களுக்குக் காரியம் சுலபமாக இருந்தது .

சித்தரின் உடம்பு 
அவர்கள் இட்ட தீயால்
நிர்மூலமாகியது.

இத்தனை நடந்தும் 
ஏதும் அறியாதவள் போல் இனிய முகத்தோடு வாழ்க்கையைத் தொடர்ந்தாள் 
மகாராணி குணவதி.

பின்னொருநாள் வீரசேனன் உருவிலிருந்த சித்தர் காட்டிற்கு வேட்டையாட  சென்றார்.

காட்டில் 
ஒளித்து வைத்திருக்கும் உடல்  நினைவுக்கு வரவே கண்டு வரலாம் என குகைக்குச் சென்றார்.

குகையில்
வைத்த இடத்தில் காயசித்தி கண்ட
உடல் இல்லை.

ராணி செய்த சூழ்ச்சி லேசாக மனதில்
நிழலாட...

அமைதியாய் 
நாடு திரும்பினார்.

ஏதும் அறியார் போல்
சில நாட்கள் இருந்து விட்டு ஒரு நாள் அரசவையில் ராணிக்கு அரசாளும் பொறுப்பைத் தருவதாக அறிவிப்பு செய்தார்.

அகமகிழ்ந்த ராணி
உடலை எரித்த கதை தெரிந்திருக்குமோ
என அஞ்சினாள்.

நாளாக நாளாக 
ராணி குணவதிக்கு
செய்த தவறு
உறுத்த ஆரம்பித்தது.

தனது செயல்
சூழ்ச்சி, துரோகம் என பூரணமாய் உணர்ந்தாள்.

சித்தரின் காலடி விழுந்தாள்.

அவர் மீது கொண்ட காதலே காரணம் என நியாயப்படுத்தினாள்.

வாய்த்த கணவரை
என்றும் பிரியாதிருக்க கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விட மாட்டார்கள் மனைவிமார்கள் என தர்க்கம் செய்தாள்.

நம்ப வைத்து 
செய்த துரோகம் எனினும் கணவன் வேண்டும் என்ற மனைவியின் 
அடிப்படை ஆசை யதார்த்தமானது என்பதை சித்தரும் ஏற்றார்.

"மன்னிப்பீர்களா"
மகாராணி
சித்தரின் மலர் பாதம் பணிந்தாள்.

"பரவாயில்லை....
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் ... 
இனி நடப்பவை 
நல்லதாக இருக்கட்டும்"
சித்தர் மனம் மகிழ்ந்தார்.

"நான் விரைவில்
உன்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவது நிச்சயம்.

என் மனம் உணரும்
இறை உத்தரவு 
வந்தால் 
சென்றுவிடுவேன்.

இனி 
என்னால் 
ஒன்று மட்டும்
தர முடியும்.
அது வரம்...
என்ன வரம் வேண்டும் கேள் ? "
சித்தர் 
மனமிரங்கிக் கேட்டார்.

பெண்ணின் மனம் ஆயிற்றே..
முடிச்சுப் போட்டது.!
" நான் என்றும் சுமங்கலியாய் 
இருக்க வேண்டும்."

ஒரு கல்லில் 
எத்தனை மாங்காய் ..?!!

வரம் கேட்பதில் வல்லவர்கள் வனிதைகள். கைகேயி கேட்ட வரங்கள் அப்பொழுது 
நினைவுக்கு வந்தது. 
சித்தர் சிரித்துக் கொண்டார். 

இனி இந்த 
சித்தாதி சித்தர் 
நம்முடனே தானே 
இருக்க வேண்டும் ?!!!

உடல் மாறாது.. 
உயிர் போகாது ...
சிந்து பாடியது 
அவள் உள்ளம்.

ஆனால் சித்தரின் சிந்தனை 
வேறாக இருந்தது.

ஒரு நாள் நள்ளிரவு
அரண்மனையை விட்டு காடேகினார் .
சதுரகிரி மலை ஏறினார்.

வழியில் 
ஓர் அந்தணன்
கற்சிலை போல நின்று கொண்டிருந்தான்.

அருகில் சென்றார் சித்தர்.
பிரமித்து நின்றார்.

அவர் கைபட்ட போது அவன் உயிர் 
பெற்று இருந்தான்.

' ஏன் இப்படி என்ன நேர்ந்தது அவனுக்கு' சிந்தனையில் ஆழ்ந்தார்.

காட்சி விரிந்தது.
நடந்தது தெரிந்தது .

ஜம்புகேஸ்வரம் என்னும் திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரன் என்ற பெயரில் 
வாழ்ந்தவன் அவன்.

குரு துணையின்றி பிரணாயாமம் செய்திருக்கிறான்.

வெளியே மூச்சை விட கற்றவனுக்கு
உள்ளே காற்றை இழுக்க தெரியவில்லை. 
மறந்து விட்டான். 
அருகே குருவும் இல்லை.

ஆட்டம் காலி.

வீரசேனன் உருவில் இருந்த சித்தருக்கு கூடுவிட்டு கூடுபாய்தல் கைவந்த கலை அல்லவா.? இரக்கம் வேறு அதிகமாய் இருக்கும் அல்லவா??

மன்னன் வீரசேனன் உடலைவிட்டு 
கணப் பொழுதில் 
அவன் உடம்பில் ஏகினார்.

அருகிருக்கும் மரப்பொந்தில்
தான் புகுந்து வெளியேறியிருந்த
வீரசேனனின் 
உடலை வைத்தார்.

அது எப்போதும் அழியாதிருக்க 
ஜோதிமரப் பூக்களையும்
சில மூலிகைகளையும் கலந்து அரைத்து 
தன் மந்திர சக்தி ஏற்றி அரசன் உடலில் பூசினார்.

இலை தழை மரப்பட்டைகளால் 
அம்மரப் பொந்தினை
மூடினார்.

பின் சாவதானமாக 
சடலமாய் இருந்த ஜம்புகேஸ்வரன்
உடம்பில் ஏகினார்.

'அழியாத அரசன் உடல்... தீர்க்க சுமங்கலியாய் அரசி'
கொடுத்த வாக்கை நிறைவேற்றிய திருப்தியில் அடுத்தகட்டத்திற்குப் பயணமானார் சித்தர்.

சதுரகிரியில் 
நீண்ட கால தவம். 
மீண்டும் காயசித்தி.
சித்தர்களே வியக்கும் அழகிய இளைஞரானார்.

காலப்போக்கில் 
சீடர்கள் பெருகினர்.
சீடன் குருராஜனும் 
சேர்ந்து கொள்ள
அவர் லயத்தில் 
சதுரகிரி மலையே ஒளிர்ந்தது.
ஓங்கி உயர்ந்தது.

சுமங்கலியாய் 
நாடாண்டு வந்த
குணவதி 
கால முதிர்ச்சியில் சதுரகிரி வாழ் சித்தர் 
பற்றி கேள்விப்பட்டு
அவர் யார் என அறியாமலேயே
சதுரகிரி மலைக்கு வந்து உதவி கோரினாள்.

தன் துயர்துடைக்க 
தாழ் பணிந்து நின்றாள்.

காடேகிய தன் கணவர் 
கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை வைத்தாள்.

"தாயே ....
தவ சக்தியால் 
அந்த மாமுனி 
உன் கணவனான
அரசன் வீரசேனன் 
உடலை 
ஒரு மரமாக 
உருவாக்கியுள்ளார்.

இந்த மரத்திற்குப் 
பூஜை செய். 
அதுவே உனக்கான சேவை. 
பதிசேவை. 
செய். 
பலன் கிட்டும்." 
ஆசியுடன் சொன்னார், கூடுவிட்டு கூடு பாய்ந்து இருக்கும் இளம் சித்தர்.

அரசி அழுதவண்ணம் 
அரச மரத்தைத் தொழுதாள்.

அரசன் உடல் 
அழியாது இருக்கும் 
அந்த மரமே 
அரச மரம் என்று அழைக்கப்படுவதாக
ஒரு நம்பிக்கை
இன்றும் உள்ளது.

விடைபெற்ற அரசி
பின் பலகாலம் 
நாடாண்டு நற்கதி அடைந்ததாக 
சதுரகிரி புராணம் சிலாகித்துச் சொல்கிறது.

எல்லாம் சரி...
கூடுவிட்டு கூடு பாய்வதில் வல்லவரான
அந்த சித்தர் 
யார் என்று தானே கேட்கிறீர்கள்?

அவர் மூலர்...
திருமூலர்.



Leave a Comment