பிணி போக்கி நல்லருள் தரும் சித்தர் மலை ஊதியூர்...


தென்னாட்டில் உள்ள கோயில்களில் 100க்கு 95 விழுக்காடுக் கோயில்கள் சித்தர்கள், ஆசிவகர்கள், பேரறிஞர்கள், பெருஞானிகள் வாழ்ந்து கடவுள் திருவுருவச்சிலைகளை நிறுவி வழிபட்டு திருவாக ஐக்கியமான இடங்கள்தான். இறைப் பேரருள் பெற்ற பெருமானார்களின் பாடல் பெற்ற தலங்கள்தான்.

பொதுவாக அடக்கவிடங்கள் மீது கட்டப்படும் கோயில்களுக்கு பள்ளிப்படைக் கோயில்கள் என்று பெயர். மக்களுக்கு சேவை செய்து சிறப்பாக வாழ்ந்த, வாழ வைத்த அரசர்களும் ஆண்டவனுக்கு ஈடாக அவர்களின் அடக்கவிடம் மீது கோயில்கள் கட்டப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பெருமை மிகு கோயில்கள் அனைத்துமே மிகப்பெரும்  அதிலும் இறைத்திருவருள் பெற்றவர்களின் இடங்கள்தான்.

திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கத்தை எடுத்துக் கொண்டால் இராமானுஜப் பெருமானார் திருவருளோடு ஐக்கியமான கோயில்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சித்தர் பெருமானார் சுந்தரர் வாழ்ந்த இடம்.
கரூர், பசுபதீஸ்வரம் சித்தர் பெருமானார் கருவூரார் வாழ்ந்த இடம்.
திருப்பதி, சித்தர் பெருமானார் கொங்கணர் வாழ்ந்து திருவருளோடு ஐக்கியமான இடம்.
முருகப்பெருமானுக்கும், சிவனுக்கும் ஆலயங்கள் அமைத்த, பூசை செய்த சித்தர் பெருமானார்கள் அனைவரும் பெரும்பாலும் அந்தத் தலத்திலேயே ஐக்கியமாகியிருப்பார்கள்.
பழனி மலை சித்தர் பெருமகனார் போகர் வாழ்ந்து தண்டாயுதபாணி திருவுருவச் சிலையை நவபாடாணங்களைக் கொண்டு உருவாக்கி அதை நிறுவிக் கோயிலாக்கி வழிபட்டு அங்கேயே ஐக்கியமான இடம்.

சித்தர் பெருமானார்கள் காயகற்பம் எடுத்து இறப்பைத் தவிர்த்து பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு வாழும் திறன் பெற்றவர்கள். நம்மிடையே வலம் வந்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கும் அன்பின் திருவுருவங்கள். எங்கெல்லாம் சித்தர் பெருமானார்களின் தொடர்புடைய கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம் மக்கள் கூட்டம் குவிவதைக் காண முடியும். காரணம், தங்கள் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு எங்கு தீர்வு கிடைக்கிறதோ அந்த இடம் நோக்கி மனிதர்கள் செல்வது இயல்பு.

ஆயிரக்கணக்கான ரூபாய் மற்றும் காலம் செலவு செய்து ஒரு கோயிலுக்குச் செல்கிறார்கள் எனில் பலன் கிடைக்காது பெரும்பாலும் யாரும் செல்லமாட்டோம் இல்லையா?' மன நிம்மதி, உடல் நலன், பண வருவாய், திருமணம், குழந்தை என ஏதாவது ஒரு தேவை தங்கு தடையின்றிக் கிடைக்க இறை வழிபாடு மிக மிக அவசியமாகிறது.

பிறவிக்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார்
என்கிறார் திருவள்ளுவப் பெருமானார்.

எந்த ஒரு வாழ்வியல் அடிப்படைத் தேவைகளுக்காகவும் இல்லையென்றாலும்கூட இறுதியாக இறப்பு - பிறப்பு தவிர்க்க  பிறவிக்கடலை நீந்திக் கடக்க இறைவனின் அடிபணிந்தே ஆக வேண்டும், வேறு வழியே இல்லை என்கிறார் திருவள்ளுவப் பெருமானார். எனவே இறைவழிபாடு ஒன்றுதான் மனிதனின் முதன்மைக் கடமையாக இருத்தல் வேண்டும்.

சரி இப்போது ஊதியூருக்குள் வருவோம்...

பழனி சித்தர் பெருமகனார் போகரின் சிறந்த சீடர் கொங்கணர். இன்றைய கேரளா அன்றைய தனக நாடு எனும் கொங்கண தேயத்தில் (தேசத்தில்) பிறந்தவர் என்பதால் கொங்கணர் என்றே அழைக்கப் படுகிறார்.  இவரது இயற்பெயர் அககூரகன். கொங்கண சித்தரின் தாய் தந்தை பெயர் திருமாய்ச்சி, கொட்டீருகன். உடன் பிறந்தவர்கள் தயைப்பன், கோபிலேனு, மருகந்தை (பெண்), புகழோடன், தேரபுகழி (பெண்), வனிவூரன், புதுஞ்செழிலி (பெண்), அககூரகன் (கொங்கணர்), கொட்டுடம்பை (பெண்), தனகோடன், பன்னிருத்தை (பெண்), மெனமொழியாள் (பெண்), இவர் கிழக்கே (இன்றைய திருப்பூர் மாவட்டம்) கனை நாடு எனும் இன்றைய காங்கேயம் பகுதிக்கு வருகிறார். சித்தர் பெருமக்களின் அருட் தொடர்பு கிடைக்கிறது. விவரம் அறிந்து அன்றைய கொடை நாடு எனும் இன்றைய பழனிக்குச் சென்று போகர் பெருமானாரிடம் சீடராக அவரது அருளால் இணைகிறார்.

அகக் கூரகனைக் கொங்கணவா என்று போகர் பெருமானார்தான் அழைக்கிறார். அதுவே பெயராக நிலைத்துவிட்டது. சுமார் 110 ஆண்டுகாலம் போகர் ஐயாவிடம் சேவை செய்ததோடு ஓகக் கலை மற்றும் சித்திரியலிலும் தேர்ச்சி பெற்றபின்னர் போகர் பெருமானாரின் அனுமதி மற்றும் அருளாசியுடன் விடைபெற்று பழனியில் இருந்து வடக்கு நோக்கிப் புறப்படுகிறார் கொங்கணர் பெருமானார்.

அவர் வந்தடைந்த இடம் காங்கேயத்திற்கு முன்னர் உள்ள ஊதியூர் மலை. எண்ணூறு ஆண்டுகள் இங்கே வாழ்ந்து தவமிருந்த கொங்கண சித்தர் பெருமானார் உத்தண்ட வேலாயுத சுவாமி (முருகப்பெருமான்) கோயிலை அமைத்து பூசை செய்து மக்கள் வழிபாட்டுக்கு அளிக்கிறார்.

ஊதியூர் மலையின் முன்புறம் இன்று முள்ள இக்கோயில் கொங்கணர் நிறுவியது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.

"ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த ஆவுடைய மாது தந்த ...... குமரேசா

ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்ற ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே

பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து பூரணசி வாக மங்க ...... ளறியாதே

பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்த போகமுற வேவி ரும்பு ...... மடியேனை

நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச

நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர நீலமயி லேறி வந்த ...... வடிவேலா

ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர

ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே"

என்று ஊதியூர் மலை வீற்றிருக்கும் கந்தபெருமாளைப் புகழ்ந்து பாடுகிறார் அருணகிரிநாதர்.

இத்தகைய பெருமை மிகு ஊதியூர் மலையில் தமது சீடர்களுடன் வசித்த கொங்கணர் சித்தர் ஊதி ஊதிப் பொன் செய்த காரணத்தால் பொன்னூதி மாமலை எனும் பெயர் பெற்றது.

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வடக்கு நோக்கிச் சென்ற கொங்கணர் பெருமானார் திருப்பதி வேங்கடம் எனும் ஏழுமலையில் இன்று, திருவேங்கடத்தான்,   வேங்கடேசப் பெருமாள் நிற்கும் இடத்தில் திருமுருகப் பெருமானுக்கு, ஊதியூர் போலவே கோயில் அமைத்து திருவருளோடு ஐக்கியமாகிறார்.

திருப்பதியின் தனிச் சிறப்பின் இரகசியம் கொங்கணர் சித்தர் பெருமானார்தான். பிற்காலத்தில் வைணவர்கள் இக்கோயிலை வழிபட வேங்கடப் பெருமாளாயிற்று.

என்ன பெயரில் வழிபட்டால் என்ன ? இறைவர்க்குள் ஏது சாதி, மத வேறுபாடு?!

இத்தகு பெரும் சிறப்புகள் பெற்ற சித்தர்கள் எங்குமே தங்கள் உருவத்தை சிலையாகவோ, பெயரை பொறித்து வைத்தோ மறையவில்லை.  உண்மையில் முருகன், சிவன், அம்மை என்று இறைவரை முன்னிருத்தினார்களே தவிர தங்களை எங்கும் முன்னிருத்திக் கொள்ளவில்ல இதுதான் பேரறிவின் தன்னடக்கம் என்பது.

சுமார் 800 ஆண்டுகள் கொங்கணர் தவமிருந்த ஊதியூர் மலை இன்றும் அதே ஆற்றலுடன் விளங்குகிறது. கொங்கணரின் சீடர் செட்டி தம்பிரான் சுவாமிகளின் கோயிலும் இங்குள்ளது. போகர் கொங்கணர் உட்பட 18 சித்தர்களும் வந்துள்ள இம்மலை மூலிகை மலை என்பதுடன் இந்த மலையின் பாறைகள் சந்திரனின் ஆற்றலுடன் தொடர்புடையது என்றும் கருதப்படுகிறது.

கருப்பணசாமி, கன்னிமார்கள், இடும்பன், அனுமன் என இறைவர்கள் இங்கு குடி கொண்டுள்ளனர். இந்த மலையில் எங்கு கால் வைத்தாலும் நல்ல நேரம் பிறந்து விட்டதாகவே பொருள் என்கிறார் செட்டி தம்பிரான் கோயில் மூத்த பூசாரி திரு.கோபால்.

திருமணத் தடை தாமதம் நீங்க, தொழில் வணிக மேன்மை பெற, மன நலம் பெற, உடல் நலம் பெற இம்மலைக்கு வந்து வழிபடுபவர்கள் நல்ல பலன்களையே பெருவதை நேரில் பார்ப்பதாகவும் கூறுகிறார் பூசாரி திரு. கோபால்.

பழனியில் இருந்து வடக்கே திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் - காங்கேயம் நெடுஞ்சாலையில் உள்ளது ஊதியூர். எல்லாம் வல்ல உத்தண்ட வேலாயுத சாமியும். சித்தர் பெருமக்களும் நம்மை எக்காலமும் காத்தருள் புரிய வேண்டுகிறோம்.

- வளர்மெய்யறிவான் (எ) விஷ்வா விஸ்வநாத்



Leave a Comment