27 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன எலுமிச்சை....


ஒட்டனந்தல் பாலதண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர விழாவில் ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் குழந்தை பாக்கியத்துக்காக ரூ.27 ஆயிரத்துக்கு எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவில் சின்னமயிலம் என்றும், இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு ஆண்டு தோறும் நடக்கும் பங்குனி உத்திர விழாவில், 11-வது நாள் நடைபெறும் விழாவின் போது பொதுமக்கள் முன்னிலையில் எலுமிச்சை பழங்கள் ஒவ்வொன்றாக ஏலம் விடப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவில் தொடர்ந்து 9 நாட்கள், கருவறையில் முருகன் அருகில் அமைந்துள்ள வேல் மீது குத்தப்படும் எலுமிச்சை பழங்கள் பாதுகாத்து வைக்கப்படும். இந்த பழங்களின் சாற்றை குழந்தையில்லாத தம்பதியினர் அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதை கிராம மக்கள் போட்டி போட்டு ஏலம் எடுப்பார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் 9 நாட்களும் வேல் மீது குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சை பழங்களுக்கு பூஜை செய்யப்பட்டது.
இறுதி நாளில் 9 எலுமிச்சை பழங்களும் கிராம மக்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டன. நாட்டாமையான பாலகிருஷ்ணன் முதல் எலுமிச்சை பழத்தின் ஏலத்தை ஒரு ரூபாயில் இருந்து தொடங்கி வைத்தார்.

இதை ஏலம் எடுப்பதற்காக பலர் போட்டி போட்டனர். முடிவில் அந்த பழத்தை ஒட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம்- ஜெயந்தி தம்பதியினர் அதிகபட்ச தொகையாக ரூ.27 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர்.

தொடர்ந்து எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. 9 நாள் திருவிழாவின்போது பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் ரூ.68 ஆயிரத்து 100-க்கு ஏலம் போனது.



Leave a Comment