கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா


கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற தென்பழனியான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகரமான தேரோட்டம் ஏப்ரல் 8ம் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை. இங்கு தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் உள்ளது. குடவரை கோவிலான இந்த திருத்தலத்தில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா மார்ச் 31 ஆம் தேதி அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவின் சிகரமான கருதப்படும் திருத்தேரோட்டம் ஏப்ரல் 8ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜை நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மேற்கொள்ளப்படும். காலை 8 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து 10.45 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



Leave a Comment