என் குலதெய்வம் காளி - எம்ஜிஆர்


பக்தி மற்றும் ஆன்மீகம் மீது ஒருவருக்கு நம்பிக்கை வந்துவிட்டால் மறைக்கவே முடியாது என்பதற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களே ஒரு உதாரணம்.. 

ஆரம்பத்தில் கடவுள் நம்பிக்கை கொண்ட அவர், திராவிட கட்சியில் சேர்ந்த பிறகு புராண, இதிகாச படங்களை அறவே தவிர்த்தார். படங்களில் அவர் தத்துவம் பேசும் காட்சிகளின் பின்புலத்தில்கூட கடவுள் படங்களை விட, புத்தர், அண்ணா போன்ற படங்களே இருக்கும். ஆனாலும் இறை நம்பிக்கையை எம்ஜிஆர் மறுக்கவேயில்லை.

தனிப்பட்ட நம்பிக்கையில் தலையிட அரசியல் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று வெளிப்படையாக சொல்லவே, தனிப்பிறவி படத்தில் முருகன் வேடம் போட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். தனது தாய்தான் தனக்கு கண்கண்ட தெய்வம் என்று உருகிய எம்ஜிஆர், தான் வாழ்ந்த வீட்டிலிலேயே தாய்க்காக கோவில் கட்டி வழிப்பட்டார். மூகாம்பிக்கை அம்மன் தனது தாய் வடிவில் காட்சியளிப்பதாக அவர் கூறியபோது திராவிட தரப்பிலிருந்து எந்த விமர்சனமும் வரவில்லை. உடுப்பி கொல்லூர் மூகாம்பிகையை எம்ஜிஆர் நேரடியாக வழிபடத்தொடங்கியதுடன் பெரும் பொருட்செலவில் கூடிய நீளமான தங்க வாள் ஒன்றையும் கோவிலுக்கு அளித்து. பக்தியின் சரணாகதித்துவத்தை பட்டவர்த்தனமாக காட்டினார்.

இறைமறுப்பு பிம்பமாக இன்றளவு திகழும் தந்தை பெரியாரை அரசியல் முன்னோடியாக கொண்டாலும், பக்தியை மறைத்து மறைத்து அவர் வழிபட்டதில்லை. பக்தியின் பலமே இதுதான். நம்பிக்கையை மனதில் விதைத்து ஆன்மீக பாதையில் ஒழுக்க நெறிகளோடு சுத்தமான பாதையில் பயணிக்க வைப்பதுதான் அதன் சிறப்பம்சம்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் யாருக்கும் தங்கள் பக்தி, வழிபாட்டு முறைகள் போன்றவற்றை மறைக்கவேண்டிய அவசியமில்லை என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா? என்ற கேள்விக்கு எம்ஜிசூர் தன் வாயாலேயே அளித்த பதில்கள்…’’நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை’’ என்கிறார்.

உங்களுக்கு குல தெய்வம் உண்டா? என்ற இன்னொரு கேள்விக்கு, ‘காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி’ என்று தன் குடும்பத்து இஷ்ட தெய்வங்களை தெளிவாகவே பட்டியலிடுகிறார் அவர்.

அல்லாவின் மேல் ஆணை என்ற வசனத்தை உச்சரிக்க விருப்பமின்றி அம்மாவின் மேல் ஆணை என்று பேசி நாத்திக பாதையை விடமுடியாததால், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மாபெரும் நிறுவனத்தோடு தொழில் உறவையே ஸ்தம்பிக்க செய்தவர் எம்ஜிஆர்.
அப்படிப்பட்டவர் பின்னாளில் ஆன்மீகவாதியாக மாறி முதலமைச்சர் என்ற வாய்ப்பு கிடைத்தபோது ஸ்ரீரங்கம் உட்பட எண்ணற்ற பிரபலமான கோவில்களின் புணரமைப்பு திருப்பணிகளை செய்தார் என்றால் அதுதான் பக்தி மார்க்கத்தின் அசைக்கமுடியாத சக்தி

- ஏழுமலை வெங்கடேசன்

தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.



Leave a Comment