நவராத்திரி நாயகிகளை வணங்குவோம்


 

சக்தி  வழிபாட்டு விரதங்கள் அநேகம் இருந்தாலும்,அவற்றுள்  ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி மிகவும் முக்கியமானவை.பெண்கள் இதனை ஒரு முக்கிய விழாவாகவே கொண்டாடுகின்றனர்.பெண்களுக்கே உரிய இந்த நவராத்திரி வழிபாடு, எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களால் கொண்டாடப்படுகிறது.  ஒரு வருஷத்தில் வரும் நான்கு நவராத்திரிகளில், புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோராலும்  கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் சரத்காலத்தில் வரும் இந்த நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுவர்.

 சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.

 தமோ குண சஞ்சாரியாக  ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியையும் , ராஜோ குண நாயகியாக ஸ்ரீ மகாலட்சுமியையும் , சாத்வீகக் குண சொரூபியாக  ஸ்ரீ சரஸ்வதியையும், இந்த  மூன்று அம்சமாக கொண்டாடும் நாட்களே நவராத்திரி.

 அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு, இவ்வுலக வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) என்பவற்றை வேண்டும் நாளாக கருதப்படுகிறது. வாழ்க்கையின் எல்லா சுகபோகங்களை அடைய,நமக்கு செல்வம் தேவை. இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். அலைமகளின் அருளால் பெற்ற செல்வத்தை பாதுகாக்க துணிவு வேண்டும்.  அதற்காக வீரத்தை அளிக்கும் துர்க்கா தேவியை வழிபடுகிறோம். அப்படி பெற்ற,பாதுகாக்கப்பட்ட செல்வத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களுக்கு  பயன் படுத்த கல்வியறிவு வேண்டும். அதற்கு சரஸ்வதி தாயை வணங்குகிறோம்.

 நவராத்திரியின்  வரலாறு

 சும்பன், நிசும்பன் என்ற, அரக்க சகோதரர்களின் கொடுமை தாங்காமல், மக்களைக் காப்பாற்ற வேண்டி, மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு,சிவனிடம் ,தேவர்கள் முறையிட்டனர்.

மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும்,வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகே உருவான பெண் கோலம் பூண்டு, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்களான சண்டன், முண்டன் என்ற இருவரும், மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்ற ஜோடி இவள் தான் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய் து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தன்னை போரில் யார் வெல்கின்றனரோ,அவர்களைத் தான் மணப்பேன் என்றாள்.

சும்பன், நிசும்பன் காதில் இது விழுந்ததும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. ஆனால் அதில், ரக்த பீஜன் என்ற ஒரு அரக்கன் தனது கடுந்தவத்தால் பெற்ற வரத்தால், அவன் உடம்பிலிருந்து விழுந்த  ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜனாக  தோன்றினான்.

உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்கிற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததை யும் குடிக்க ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் இச்சா சக்தியை தருகிறாள். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை,தந்து  எல்லா செல்வங்களையும் அருளுகிறாள். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.

தசமியான  பத்தாவது நாள் மோட்சத்தை அடைய வழி ஏற்படுத்திக் கொடுத்து நம்மை ஆட்கொள்கிறாள்.

 

முப்பெரும் தேவியரை வணங்கி நலம் பெறுவோம்....

 

 



Leave a Comment