அத்தி வரதர் கோயிலில் வரதராஜப்பெருமாளுக்கும், மலையாள நாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம்


அத்தி வரதர் கோவில் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி உற்சவர் வரதராஜப்பெருமாளுக்கும், மலையாள நாச்சியாருக்கும் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம்.

உலக புகழ்பெற்றதும், அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள  பெருந்தேவித்தாயர் சமேத ஸ்ரீ தேவராஜசுவாமி திருக்கோயில் எனும் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி தொடங்கி அனுதினமும் மலையாள நாச்சியாரும்,பெருமாளும் திருவடிக்கோயில் வரை வீதியுலாவாக சென்று ஆலயம் திரும்பி வந்து கோயிலில் உள்ள 100 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் கண்டருளி பின்னர் கோயில் கண்ணாடி அறைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர்.

இந்நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவத்தையொட்டி ஆலய வளாகத்தில் பெருமாளுக்கும், மலையாள நாச்சியாருக்கும் மாலை மாற்றல் வைபவம் நடைபெற்று  பின்னர் இருவரும் கோயில் 100கால் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதனையடுத்து கோயில் பட்டாச்சாரியார்களால்  ஆகம விதிப்படி பெருமாளுக்கும், மலையாள நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்று  அட்சதை ஆசீர்வாதமும், பக்தர்கள் அனைவருக்கும் அட்சதை விநியோகமும் செய்யப்பட்டது.

மேலும் திருக்கல்யாணம் நிறைவு பெற்ற பிறகு பெருந்தேவித்தாயாரின் கருவறைக்கு ஸ்ரீதேவி,பூதேவி,மலையாள நாச்சியார்,ஆண்டாள் மற்றும் உற்சவர் வரதராஜப்பெருமாள் ஆகியோர் எழுந்தருளி சேர்த்தி சேவை நடைபெற்றது.மேலும் இவ்விழாவின் தொடர்ச்சியாக வியாழக்கிழமை அதிகாலையில் விஸ்வரூபக் காட்சியும் நடைபெறுகிறது. பெருந்தேவித் தாயார் கருவறையில் வியாழக்கிழமை மாலை 5 மணி வரை அனைவரையும் ஒரு சேர தரிசிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனைவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத் தக்கது.



Leave a Comment