தைப்பூசத் திருவிழா உருவான விதம்...


என்ன தான் தேவர்களும் அசுரர்களும் சகோதரர்களாக இருந்தாலும், அசுரர்கள் அதிக பலம் பெற்றவர்களாக இருந்ததால், அவர்களை எதிர்த்து தேவர்கள் போரிட முடியவில்லை. என்ன தான் போரிட்டு அசுரர்களை அழித்துக் கொண்டே வந்தாலும், திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருந்தனர். இதனால் தேவர்கள் களைத்து போய் விட்டனர்.

தங்களால் அசுரர்களை எதிர்த்து வெல்ல முடியாது என்று மூளைக்கு உறைத்த உடனே, தங்களை வழிநடத்தவும், அசுரர்களுக்கு எதிரான போரில் தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு தலைவனை உருவாக்கி தரவேண்டும் என்று எம்பெருமான் ஈசனிடம் முறையிட்டனர்.

முக்காலமும் உணர்ந்த எம்பெருமான், தேவர்களின் மனக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டி, தன்னுடைய சக்தியில் இருந்து உருவாக்கிய அவதாரம் தான் கருணைக் கடலான கந்தவேல்.

சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்படுத்திய ஆறு தீப்பொறிகளையும், சரவணப் பொய்கையில் விழுமாறு செய்தார். சரவணப் பொய்கையில் விழுந்த ஆறு தீப்பொறிகளும் அழகிய ஆறு குழந்தைகளாக உருமாறின.

உடனே அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கந்தன், கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டார். கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த கார்த்திகேயனை, அன்னை பார்வதி தேவியார் சேர்த்து அனைத்து ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கினார். ஆறு முகங்களையும் ஒன்றாக்கியதால் முருகன் என்றழைக்கப்படுகிறார்.

முருகன் ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் போது அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக, ஞானவேல் வழங்கிய திருநாள் தான் தைப்பூச திருநாள் ஆகும்.  இதன் காரணமாகவே, அறுபடை வீடுகளில், மற்ற இடங்களை  விட , பழனி மலையில் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது.

தேவர்களின் படைத் தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகப் பெருமான் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூச திருநாளில் வணங்கி வழிபட்டால், மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம் என எந்த கெட்ட சக்தியும் நம்மை அனுகாது என்பது நிச்சயம்.



Leave a Comment