முருகனின் ஆண்டி கோல தரிசனத்தின் ரகசியம்...


முருகப்பெருமானை பழனி மலைக்கு சென்று தரிசனம் செய்தால் நம்முடைய கர்மவினைகள் குறையும். கர்ம வினைகளால் ஏற்படும் நம்முடைய  பிரச்சனைகள் தீர பழனி முருகனை எப்படி வழிபாடு பூஜை செய்வது என்ற தேவரகசியம் தெரியுமா? பழனி  முருகப்பெருமானை  ஆண்டி கோலத்தில் இருக்கும் போது தரிசனம் செய்தால் நம்மை ஆண்டியாக ஆக்கி விடுவார் என்றும், ராஜ அலங்காரத்தில் இருக்கும் போதும் மட்டுமே தரிசனம் செய்தால்  ராஜ வாழ்க்கை கிடைக்கும் என்றும் பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

ஆனால் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தீராத துயரத்தை அனுபவித்து வந்தால், அதிகப்படியான தடைகள்  உங்களுடைய வாழ்க்கையில் இருந்தால் பழனி முருகனை தண்டாயுதபாணி கோலத்தில் அதாவது ஆண்டி அலங்காரத்தில் தரிசிப்பது தான் சிறந்தது.

முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக. பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.

ஜோதிடப்படி பார்க்கும் போது செவ்வாய் கிரகம் முருகனுக்கு வருகிறார். அதிலும் இந்த  பழனி முருகன் கொஞ்சம் ஞானகாரகனாக இருக்கிறார். மேலும், இந்தச் செவ்வாயுடன் குருவும் கலக்கிறார். வீரம், தைரியம் இதற்கெல்லாம் உரியது செவ்வாய். இந்த வீரமும், தைரியமும் இருந்ததால்தான் எல்லோரையும், எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு அவர் வந்து இங்கு நிற்க முடிந்தது.

ஆனால் நின்ற உடனேயே அங்கு குரு வந்துவிடுகிறார். செவ்வாயாக வீரவேசத்துடன் கிளம்பி குருவாக நிற்கிறார். வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குவதே நன்று. 20 வருடமா வாதாடிக் கொண்டிருக்கிறேன். தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார்.

தீராத நோய், மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம். மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம்.

 



Leave a Comment