திருப்பதிக்கு 894 ஆம் ஆண்டு பிறந்தநாள்.... கொண்டாட்டம்,கோலாகலம்....


கடந்த 1130 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே தற்போதைய நான்கு மாட வீதியில் அக்ரஹாரம் கட்டுவதற்காக ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

அதற்கு முன்னர் வரை திருப்பதியில் கோவிந்தராஜ சுவாமி கோவில் மட்டுமே இருந்தது. திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் தற்போதைய கபில தீர்த்தம் பகுதியில் அப்போது கோட்டூர் என்ற பெயரில் ஒரு சிறிய கிராமம் இருந்துள்ளது.

அந்த கிராமத்தில் வசித்தவர்கள் தினமும் திருப்பதிக்கு வந்து கோவிந்தராஜ சுவாமிக்கு கைங்கரியம் செய்துள்ளனர். ஆனால் கோவில் அருகிலேயே இறை கைங்கரியகாரர்கள் இருப்பது நல்லது என்று கருதிய ராமானுஜாச்சாரியார் 1130 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அக்ரஹாரம் கட்டுவதற்காக பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

அன்றைய தினமே திருப்பதி நகரின் நிர்மாண துவக்க நாளாகும். எனவே இதனை கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ஆம் தேதி அன்று திருப்பதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

 அந்த வகையில் இன்று திருப்பதிக்கு 894 ஆவது பிறந்த நாள் ஆகும். நகரின் 894 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவிந்தராஜ சாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

 தொடர்ந்து திருப்பதி நகரில் முக்கிய வீதிகள் வழியாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் கருணாகர ரெட்டி தலைமையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.



Leave a Comment