ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்


 

பகவான் விஷ்ணுவின் தசாவதாரம் நமக்கு பல செய்திகளை தாங்கியுள்ளது. பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்து கட்டியவர்.நரசிம்மர் தன்னை நோக்கி கூப்பிடுபவர் யாராக இருந்தாலும்,எந்த நேரத்திலும்,எங்கிருந்தும் தோன்றக் கூடியவர் என்ற நம்பிக்கையை பக்தர்களின் மனதில் விதைத்தவர். ராம அவதாரமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற மிகப்பெரிய  வாழ்க்கை தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது. இவை எல்லாவற்றையும் விட ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை மனதில் நினைக்கும் போதே குதூகலமும் ,உற்சாகமும் நம்முள் கரைபுரளும். அந்த அளவிற்கு தனது சுட்டித்தனமான லீலைகளாலும், குறும்பான விளையாட்டுக்களாலும்  நம் மனதை கொள்ளைக்கொண்டவன் அந்த கோகுல கண்ணன்.

அவதார நோக்கம் என்னவோ, கம்சன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காக்க  தான் எனினும் அந்த காலகட்டத்தில் எதைப் பற்றியும் கவலையில்லாமல் ஆடிப்பாடி தானும் மகிழ்ந்து இருந்து, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்துக்கொண்டவன் அந்த கண்ணன்.  அந்த தீராத விளையாட்டுப் பிள்ளை அவதரித்த தினமே ஸ்ரீ  கிருஷ்ண ஜெயந்தி.

ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ,அஷ்டமி ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணரின் படமோ அல்லது  சிலையோ  நன்றாக அலங்கரிக்கப்பட்டு . கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களான  வெண்ணெய், அவல் , பால் , திரட்டுப்பால் , பழங்கள், தயிர் , வெல்ல சீடை ,கார சீடை , கார வகைகள் நைவேத்தியம் செய்யப்படுகிறது. குசேலர் அளித்த ஒரு பிடி அவலுக்கு பதிலாக,பகவான் கிருஷ்ணர் செல்வத்தை அள்ளி தந்ததால் இந்தக் கொண்டாட்டத்தில் அவல் முக்கிய இடம் பிடிக்கிறது.கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, பாலக் கண்ணனின் கால் பாதங்களை வரைவார்கள்.

சந்தான கோபால கிருஷ்ணனாக ,யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம் பார்ப்பவர் மனதை கொள்ளைக்கொள்ளும். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த சந்தான கோபால கிருஷ்ணனை  வணங்குபவர்களுக்கு, அவனைப் போலவே அழகான  புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆலயங்களில்  மட்டுமின்றி பலரது வீட்டில் பூஜை அறையிலும்  காணப்படும் ,கிருஷ்ணனின் தவழும் கோலமான பாலகிருஷ்ணன் அவரின் அடுத்த கண்கொள்ளா காட்சியாகும்.  வளரும் பருவத்திலேயே காளிங்கன் என்ற நாகத்தின் கர்வத்தை அடக்கி,அதன் மீது நர்த்தனம் புரிந்தவன்  காளிய கிருஷ்ணன். வாலிப பருவத்தில் , கேளிக்கை விளையாட்டுக்கள் இருந்தாலும் ,தன் மக்களை இந்திரன் தண்டிக்க அனுப்பிய, அடாது மழையில் இருந்து அவர்களை காக்க கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கி ரட்சித்தான்.ராதா-கிருஷ்ணனாக தன் முன் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவன்.  ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் கிருஷ்ணன் நின்றிருக்கும் முரளீதர திருக்கோலம் தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. அஷ்ட புஜங்களை காட்டி  குழலூதும் மதனகோபாலன் கன்னியரின் தூக்கத்தைக் களைத்தவன்.பார்த்தனுக்கு சாரதியான அந்த  பார்த்தசாரதி,அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்து பார்த்தனுக்கு தத்துவ ஞானியாய் காட்சியளித்தவன்.

மக்களின் நாயகனாக விளங்கும் அந்த கோபால கிருஷ்ணனின்  ஜென்மாஷ்டமியை கொண்டாடி மகிழ்வோம்.

 



Leave a Comment