சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (ஆனாய நாயனார் )


 

இசையால் சிவபெருமானை மயக்கிய ஆனாய நாயனார்

 

மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்

    மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்

கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து

    குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்

 தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்

    தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து

பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்

    போதுகவென் றருளவுடன் போயி னாரே.

 

- யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

 

 லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம்.

திருமங்கலம் என்ற திருத்தலத்தில்,ஆயர் குலத்தில் ஆனாய நாயனார் அவதரித்தார். சிவதொண்டை தனது மூச்சாக கொண்ட இவரிடம், ஏராளமான பசு மந்தைகள்  இருந்தன. ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவர்.  பசுக்கூட்டத்தை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும் போது இவர் குழல் ஊதுவார்.

ஒருநாள் வழக்கம் போல்,திருநீறு அணிந்துகொண்டு பசுக்களுடன் முல்லை நிலத்திற்கு செல்கிறார். கார் காலமாதலால் வனமெங்கும் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசியது. காணும் பொருட்களிளெல்லாம் சிவனை காணும் நாயனார் , ஐந்தெழுத்து மந்திரத்தை நமச்சிவாய என்று குழலோசையில் வசித்தார்.

சிவமயமான  குழல் ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நின்றது.  அதே போல எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அசையாமல் நின்றது. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நின்றது.மலர்கள் அசையாமல் நின்றது. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது.

 ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது. வானத்தையும் தன் வசமாக்கிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல்  எழுந்தருளி உமையாள் சகிதம் எதிர்நின்று காட்சி தந்தார்.  அக்குழல் இசையை என்றும் கேட்பதற்கு “இந்நின்ற நிலையே பூமழை பொழிய", முனிவர்கள் துதிக்கக் குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் எம்பெருமான்  சிவனோடு ஜோதியில் சங்கமித்தார்.

இசையால் இறைவனை  வசப்படுத்திய ஆனாயர் வாழ்க்கை நமக்கு சொல்லும் எளிய பாடம் , பெரும் விரதங்கள் , யாகங்கள் , ஹோமங்கள் மூலம் இறைவனை அடையும் முயற்சிகளுக்கு இணையானது இறைவனின் புகழை அனுதினமும் தியனிப்பதும் , மனமுருகி பாடுவதும் என்பதே. தென்னாடுடைய சிவனை இதயத்தில் நிறுத்தி வாயாராப் பாடுவோம் . சிவபெருமானின் பேரருள் பெறுவோம்.

ஓம் நமச்சிவாய .........



Leave a Comment