திருப்பதி, மதுரைக்கு ஆண்டாள் அணிந்த மாலை செல்வது ஏன்?


ஸ்ரீரங்கத்தில் அருளும் ரெங்கநாதரை மணம் முடித்துக்கொண்ட ஆண்டாள் அணிந்த மாலை திருப்பதி வெங்கடாஜலபதி, மதுரை கள்ளழகர் ஸ்வாமிக்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இதற்கான காரணம் இதுதான்.

ஆண்டாள், கண்ணனை கணவனாக அடைய இவ்விரு பெருமாள்களிடமும் வேண்டிக்கொண்டாளாம். எனவே, அதற்கு நன்றி செய்யும்விதமாக உற்சவ ஆண்டாள் அணிந்த மாலை சித்ரா‌ பெளர்ணமியின் போது, கள்ளழகருக்கும், புரட்டாசி 5ம் திருநாளன்று திருப்பதிக்கும் செல்கிறது. 

அவள் கொடுத்தனுப்பும் மாலையுடன் ஆண்டாள் பட்டுப்புடவை, கிளியும் கொண்டு செல்லப்படுகிறது.

பூமியைக் காட்டிய அம்பாள்:

ஆண்டாள் இடது கையில் கல்காரபுஷ்பம், கிளியும், வலக்கையை தொங்கவிட்டு பூமியைக்காட்டியபடி இருக்கிறாள்.  இதனை, ஆண்டாள் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் செய்வதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் கோலம் என்கிறார்கள்.

ஆண்டாளுக்கு கிளி ஏன்?:

கிளி சொன்னதைச் சொல்லும் தன்மையுடையது.  ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். 

ஆகவே, ஆண்டாள் திருமணத்திற்கு உதவியதற்கு மரியாதை செய்யும்விதமாக கிளியை தன் இடக்கையில் வைத்திருக்கிறாள். வியாசரின் மகனாகிய, சுகப் பிரம்மரிஷியே ஆண்டாள் கையில் கிளியாக இருப்பதாகவும் சொல்வதுண்டு.

கிளி செய்யும் முறை:

இத்தலத்தில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலையில் சாயரட்சை பூஜையின்போது இந்த கிளி ஆண்டாளுக்கு வைக்கப்படுகிறது. ஆண்டாள் மறுநாள் காலை வரையில் கையில் கிளியுடன் இருக்கிறாள். 

பின், இந்த கிளி பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனை மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து செய்யப்படுகிறது.

மாலையில் சேர்க்கப்படும் பூக்கள்:

ஆண்டாளக்கு சாத்தப்படும் மாலையில் செவ்வந்தி (மஞ்சள்), விருட்சி (இட்லிப்பூ என்றும் சொல்வர்) (சிவப்பு), சம்மங்கி (வெள்ளை), மருள் (பச்சை), கதிர்பச்சைப்பூ (பச்சை) ஆகிய மலர்களும், துளசியும் பிரதானமாக சேர்க்கப்பட்டு மாலை செய்யப்படுகிறது. 

இப்பூக்கள் அனைத்தும் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்திலேயே வளர்க்கப்படுகிறது. திரு விழாக் காலங்களில் ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர்மாலை கொடுத்தனுப்புகின்றனர்.
 



Leave a Comment