அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வரலாறு


- "மாரி மைந்தன்" சிவராமன்

 

திருநீலகண்ட நாயனார் புராணம்    (பாகம்-1)


சிதம்பரத்தில் 
ஒரு சிவபக்தன்.

பிறப்பாலும்
தொழிலாலும்
அவன் ஒரு குயவன்.

மண்பானை செய்து விற்பது அவனது 
ஜீவனத் தொழில்.

அவனுக்குப் பிடித்த 
சிவ தொழில் 
ஒன்று உண்டு.

சிவனடியார்களைக் கண்டால் விடமாட்டான். அடி தொழுவான்.
அவரைத் தன் 
குடிசைக்கு அழைத்து வந்து உபசரிப்பான்.

பரமசிவனே விஜயம் புரிந்தது போல்
பரவசம் அடைவான்.
புளகாங்கிதம் கொள்வான். 

அவன் மணந்த 
மங்கை நல்லாளோ
அவனினும் மிக்க அன்பரசி.
சிவனடி தொழும் மாதரசி.
அடியார் போற்றும் கற்பரசி.


காலை எழுந்தவுடன் முதலில் ஒரு திருவோடு செய்வது அவர் வழக்கம். 

இல்லம் வரும் சிவனடியாருக்கு 
உள்ளம் போற்றும் அத்திருவோட்டை வழங்கி வழியனுப்புதல் 
அவர்தம் இறைகொள்கை.

இறையருளால் 
இளமை ததும்பி 
நின்ற இருவரும் 
இல்வாழ்க்கையிலும் குறை வைக்கவில்லை.

அக்கம்பக்கத்தார் பொறாமை கொள்ளும் அளவுக்கு 
அத்தனை அன்யோன்யம்.

சிவன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் அவன் பரமனை 
சிவன் என்றோ 
உலவும் ஆயிரமாயிரம் திருநாமங்களிலோ தொழுவதில்லை.

ஒரு காலத்தில் 
உலகை உய்விக்க சிவபெருமான் 
ஆலகால விஷத்தை உண்ட போது
அருகிருந்த 
சிவகாமித் தாயார் 
அவரது கழுத்து கண்டத்தை 
இறுகப்பற்றி
கீழே விஷம் இறங்காமல் காத்த சம்பவம் 
அடிக்கடி அவன் கற்பனையில் 
காட்சியாய் வந்து நிற்கும்.

எனவே அவன் எம்பெருமானை 'திருநீலகண்டம்' என்றே எந்நேரமும் அழைப்பான்.
சர்வகாலமும் தொழுவான்.

எதற்கெடுத்தாலும் 'திருநீலகண்டம்'
எனும் எட்டெழுத்து மந்திரத்தை
அவன் திருவாய் மலர 
அது ஆங்கிருப்போர் 
அத்தனை பேரின் செவிகளையும் 
தேனாய் நிரப்பும்.

எனவே 
'அவரை'
சிதம்பரத்து மக்கள் 'திருநீலகண்டர்'
என்றே வாய் மணக்க சொல் இனிக்க
அழைக்கலாயினர்.

பேராண்மையும் 
பேரன்பும் 
பேரின்ப பெருவாழ்வும் நிறைந்திருந்த திருநீலகண்டரின் 
திரு வாழ்வில் 
ஒரு திருவிளையாடல் புரிய நினைத்தார் 
தில்லையம்பதியார்.

அக்கணமே 
திரிசடையனின் திருவிளையாட்டு அரங்கேறத் தொடங்கியது.

அப்போது திருநீலகண்டர் இறை பணி முடித்து
வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அது சமயம் திடீரென லேசான மழை.

மழைக்கு ஒரு வீட்டின் திண்ணையில் ஒதுங்கினார் நீலகண்டர்.

அந்த வீடு 
ஒரு வேசியின் வீடு.

யதார்த்தமாக 
அவ்வேளை அவள் தாம்பூலச்சாறை
சன்னல் வழியே 
வெளியே துப்ப...

அச் செஞ்சாறு
நீலகண்டரைக்
கறை ஆக்கியது.

இதைக் கண்டு 
துடித்துப் போன பரத்தை நீலகண்டரை
வீட்டினுள் அழைத்து
சொம்பு நீர் தந்து
தாம்பூலக் கறையைக்
கழுவச் செய்தாள்.

அப்போதுதான் 
நீலகண்டர் 
அவள் முகம் பார்த்தார்.

அவளைப் பரத்தை
என்று சொன்னால் சொன்னவர் 
நாக்கு அழுகும்.
அப்படி 
ஒரு குடும்ப விளக்காய் காட்சியளித்தாள்.

வந்ததை வரவில் வைக்கும் 
உடல் விற்பவள் 
அல்ல அவள்.
மனம் ஒப்பும் 
மணவாளனுடன் மட்டும் கூடிக் களிக்கும்
சரசக்காரி.
காதல் களியாட்ட
சிருங்காரச் சிங்காரி.

இருவர் கண்களும் ஈர்த்திழுக்க
பிடித்தது காட்டுத் 'தீ'
கொழுந்துவிட்டு 
எரிந்தது காமத் 'தீ'.

அவள் விழிகள் 
விருந்து போட
நீலகண்டர்
தன்னைத் தொலைத்தார்.
நாளும் தொழும் 
தலைவன் 
சிவனை மறந்தார்.
ஊரே மெச்சும் இல்லத் தலைவியையும் மறந்தார்.

எப்படியோ ஒருவழியாக காமத் தேர் 
நிலைக்கு வந்தது.
நிலைமை புரிந்த நீலகண்டர் 
வெட்கித் 
தலைகுனிந்த படி 
வீட்டிற்குத் திரும்பினார்.

அப்போது பலத்த மழை.
அம் மழைத்துளிகள் நீலகண்டரின் கறையை நீக்க முடியாமல்
வேதனையோடு 
தரைமண் சேர்ந்தன.

காமம் பொல்லாதது.
பிரம்மாவையும் இந்திரனையும் சந்திரனையும் 
காசிபரையும் விசுவாமித்திரரையும்   பெண்களையே 
பார்க்க வேண்டாம் 
என்று காடேகிய மகான்களையும் விட்டுவைக்காதது.

காமம் விஷம் 
என்று
மூச்சுக்கு 
முன்னூறு தரம் போதித்தவர்  கூட 
ஆரணங்கின் 
ஸ்பரிசம் பட்டதும்
அமிர்தம் என்று 
தாகம் தீர்த்த
புராணக் கதைகள் 
ஆயிரம் உண்டே.

நீலகண்டர் 
எம்மாத்திரம்?

வீட்டின் வாசலில் அலங்கரிக்கப்பட்ட அம்மனைப் போல் அபிஷேகிக்கத்தக்க 
லட்சுமி போல் கணவனுக்காகக் காத்திருந்தாள் 
கற்புடை நல்லாள்.

நீலகண்டரின் 
அன்றைய செயல்தான் விஷம் போல் 
நீலம் 
பூத்து இருந்ததே!

மாற்றம் 
இல்லாளுக்குப் புரிந்தது.
காமுகக் கணவனின் தகிடுதத்தம் 
கண்களை நனைத்தது.

கோபம் கொப்பளித்தது.
காத்திருந்த தாபம் காற்றோடு கரைந்து அணைந்து
கோபக்கனல் கொழுந்துவிட்டு எரிந்தது.

அதை ஊடல் என நினைத்த நீலகண்டர்
சரச மாடி 
சமாளித்து விடலாம்
என மனையாளை நெருங்கினார்.

அம்மையாரின் எதிர்ப்பு ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருந்தது.
கடும் புயலின் அமைதி.
குரல் மட்டும் கணீர்.

"தொடாதீங்க... இன்னொரு மாதைத் தொட்டக் கரங்கள் 
இனி 'எம்மைத்'
தொட வேண்டாம்...
திருநீலகண்டம் மீது ஆணை...!"

நீலகண்டர்  அதிர்ந்தார்.

பரத்தை வீடு சென்று சரசமாடிய கதை 
அதற்குள் வீட்டுக்குத் தெரிந்து விட்டதே!

அப்போது அவருள் 
ஒரு வார்த்தை உறுத்தியது.

மனையாள் 
மந்திரம் போல் உத்தரவிட்ட 
'எம்மைத் தொடாதே'
அவர் உள்ளத்தை உலுக்கியது.

'எம்மை'
என்பதிலிருந்த 'பன்மை' எப்பெண்ணையும் தொடாதே 
என்று தொனித்தது.

உள்ளிருக்கும் நாதன் 
'ஆம்' என்று 
ஆமோதிப்பது 
போலிருந்தது.

அக்கணமே விலகினார்.
'எப்பெண்ணையும் 
இனி பாரேன்...
உடல் சுகம் தேடேன்...'
நீலகண்டர் முடிவெடுத்தார்.

முடியுடை சிவனும் உள்ளிருந்தே 
உளம் சிரித்தான்.

(திருநீலகண்டர் புராணம்- - தொடரும்)



Leave a Comment