பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில், வைகாசி மாதம் கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழா வசந்த உற்சவம் என்று வர்ணிக்கப்படுகிறது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஒளி பிளம்பாய் முருகப்பெருமான் தோன்றிய நாள் வைகாசி விசாக திருநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா வில்வ வனம் என்று அழைக்கப்படும், பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக் கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு பூஜையும், 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி உட்பிரகாரம் வலம் வந்து, கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் விநாயகர் பூஜை, கொடி மரம் மற்றும் கொடி படத்துக்கு பூஜைகள் நடந்தன. அதையடுத்து காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு வேத விற்பனர்கள், ஓதுவார் கள் மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



Leave a Comment