வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்!


திருச்செந்தூரில் அமைந்துள்ள, சுப்ரமணிய சுவாமி கோவில், அறுபடை வீடுகளில், இரண்டாம் படை என போற்றப்படும், மிகச் சிறப்புமிக்க கோவிலாகும். சூரசம்ஹாரம் சிவனின் தோன்றல் பாலமுருகனுக்கும், சிவனின், தீவிர பக்தன் சூரபதுமனுக்கும், திருச்செந்துார் கடற்கரையில் நிகழ்ந்ததால், அங்கு, இப்போதும் இந்நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில், ஆண்டுதோறும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மிகச் சரியாக, திருச்செந்துாரில் இருந்து, 6 மைல் துாரத்தில், கடற்கரையோரமாக உள்ள, மாம்பாடு என்ற தலத்தில் தான், போர் நடந்தது. தற்போது, அந்த ஸ்தலம், மணப்பாடு என, அழைக்கப்படுகிறது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... என்கிற கோஷம், விண்ணை முட்டும் அளவிற்கு, பக்தர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும், முருகனை மயில் வாகனத்தில் ஏற்றி, சேவல் கொடியை அளிக்கின்றனர். போரில் வெற்றி அடைந்ததும், முருகன், தன் அய்யன் சிவனுக்கு பூஜை செய்ய விரும்பினான். அதற்காக, கடற்கரையில் கட்டப்பட்ட கோவில் தான், திருச்செந்துார் கோவில். இங்கு, மூலஸ்தானத்தின் பின்பகுதியில், முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தை காணலாம். 

வெற்றி மாநகர் என, பொருள் படும்படி, ஆரம்பத்தில் வடமொழியில் ஜெயந்திபுரம், பின், சயந்தி, செந்தில் என அழைக்கப்பட்டு, இறுதியில், திருச்செந்துார் என்ற தமிழ்ப்பெயரில் நிலைத்து இருக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை நேரில் கண்டாலும், அதன் சிறப்பை படித்தாலும், பெரியவர்கள், ஆன்மிகவாதிகள் சொல்ல காது குளிரக் கேட்டாலும், பகைவனின் பயமின்றி தைரியமாக வாழலாம். அஞ்சும் முகம் தோன்றும் போது, இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள் என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சியின் போது வழங்கப்படும் பிரசாதம், திருநீறு மந்திரமாகும் என்பது, திருமூலர் வாக்கு.

கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு, சூரபதுமன் வதம் தவிர்த்து, மேலும் இரு காரணங்கள் உண்டு. உலக நன்மைக்காக, முருகன் அவதரித்த நாள் என்பதற்காகவும், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை வேண்டி, யாகம் செய்ய முருகன் தோன்றி, அருள்புரிந்த நாள் என்பதற்காகவும் கொண்டாடப்படுகிறது. கணவனும், மனைவியும் இணைந்து இந்த விரதத்தை மேற்கொண்டால், நல்ல பிள்ளைகள் பிறப்பர் என்பது நம்பிக்கை!
 



Leave a Comment