கந்த சஷ்டி திருநாள்.... கேட்ட வரம் தரும் முருகப்பெருமான்!


ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம் மற்றும் புகழ் என்கிற ஆறு குணங்களை குறிக்கிற, இந்த ஆறுமுகக் கடவுளை தோற்றுவிக்க எழுந்தது, அதோமுகம். அதோமுகம் என்பது, சிவனின் ஆறாவது முகம் என, தன் திருமந்திரத்தில் குறிக்கிறார், திருமூலர். சிவன், ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களை, திருவானைக்காவல் திருத்தலத்தில் காட்டி அருள்கிறார். 

ஞானிகளுக்கு மட்டும் புலப்படும் ஆறாம் முகமான அதோமுகம், சூட்சுமமாக கண்களுக்கு புலப்படாமல், மறைந்து அகமுகமாகவே இருக்கும். ஆனால், சூரபதுமனை வெல்வதற்காக, திருமுருகனைத் தோற்றுவிக்கத் தீப்பொறியைத் தெறிக்க எழுந்த போது, காட்சியானது அதோமுகம். இம்முகம், பூலோக இறுதியில், ஊழியின் முடிவில், மீண்டும் தோன்றும் என்கிறது திருமந்திரம். உக்கிரத்தை வெளிப்படுத்தும் அதோமுகம், சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளிக்கும் போது மட்டும், சாந்த சொரூபமாக இருக்கும்.

 கந்த சஷ்டி திருநாள் :

கந்த சஷ்டி... வேல் என்றால், அது ஆணவத்தை அழித்து, நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். இதன் பொருள் விளங்கும்படி தான், பக்தர்கள், வேல் வேல் வெற்றிவேல்... என, முழங்குகின்றனர். ஐப்பசி மாதத்தில் வருகிற தேய்பிறை சஷ்டியே,கந்தர் சஷ்டி நாள். இந்நன்னாளில், என்ன வரம் கேட்டாலும், அந்த வரம் தந்திடுவான் முருகன் என்பது நம்பிக்கை. மற்ற நாட்களில், விரதம் இருக்க இயலாதவர்கள் கூட, ஆறாவது திதி நாளாம், சஷ்டியில் விரதம் இருப்பதன் மூலம், மகாலட்சுமியின் அருளையும் பெறலாம் என்பதும் ஐதீகம்.
 



Leave a Comment